‘பாணந்துறை குடு சலிந்து’வின் பணப் பொறுப்பாளர் மனைவியுடன் கைது
Ad Space
Ad Space
Ad Space
போதைப்பொருள் கடத்தல்காரரான 'பாணந்துறை குடு சலிந்து' என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷித குணரத்னவின் பணப் பொறுப்பாளராகச் செயற்பட்ட நபர் அவரின் மனைவியுடன் நேற்று வியாழக்கிழமை (17) இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மனைவியுடன் சேர்ந்து போதைப்பொருளை விநியோகித்து பணம் சேகரித்துக் கொண்டிருந்த போது, இரத்மலானை விமான நிலைய சந்திக்கு அருகில் வைத்து கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸாரினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 63 இலட்சம் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெரோயின், நவீன பணம் எண்ணும் இயந்திரம், இலத்திரனியல் எடைமானி மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், முச்சக்கரவண்டியொன்றில் போதைப்பொருளை எடுத்துச் செல்லும் நபர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனையடுத்து, விமான நிலைய சந்தி பகுதியில் இருந்து காலி வீதி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இதன்போது, முச்சக்கரவண்டியில் பெண்ணொருவரும் பயணித்துள்ளார்.முச்சக்கரவண்டியின் சாரதி பாணந்துறை, அலுபொமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்ததுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணை மற்றும் சோதனையின்போது ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், குறித்த பெண்ணிடம் இருந்த பயணப் பையை பொலிஸார் சோதனையிட்டபோது, அதில் பெருந்தொகையான பணம் காணப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கைது செய்யப்பட்ட இருவரும் கணவன் – மனைவி என்பதும், ‘பாணந்துறை குடு சலிந்து’வின் சார்பில் போதைப்பொருள் விநியோகம் மற்றும் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக மாதாந்தச் சம்பளமாக சலிந்து என்பவர் 150,000 ரூபாயை வழங்கி வந்ததாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் இரண்டு வருடங்களாக பிலியந்தலை, ஹெடகம பகுதியில் வாடகை வீடொன்றில் குறித்த தம்பதி வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான 26 மற்றும் 34 வயதுடைய கணவன் – மனைவி இருவரையும் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Ad Space
Ad Space
Ad Space