45 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய போலி அதிகாரி கைது
Ad Space
Ad Space
நில ஆணையாளர் அலுவலக அதிகாரியெனத் தெரிவித்து, 45 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்ற நபர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமையவே இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. குறித்த பெண்ணிடம் காணி உறுதிப்பத்திரம் அல்லது அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில், அவர் வசிக்கும் காணிக்கு காணி உறுதிப்பத்திரத்தைத் தயாரித்துத் தருவதாகத் தெரிவித்து சந்தேகநபர் நம்பவைத்துள்ளார்.
தன்னை நில ஆணையாளர் அலுவலக அதிகாரி என அடையாளப்படுத்திக்கொண்ட சந்தேகநபர், காணி உறுதிப்பத்திரத்தைப் பெற்றுத் தருவதற்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், குறித்த காணி அமைந்துள்ள நோர்வூட் பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரின் அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கு, கிராம உத்தியோகத்தருக்கு வழங்க வேண்டும் எனக் கூறி மேலதிகமாக 45 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுள்ளார்.
இதன்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், திங்கட்கிழமை (6) முற்பகல் 10.40 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கைதான நபர் கவரவில, சாமிமலைப் பகுதியை சேர்ந்த தரகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Ad Space
Ad Space