கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) கொக்கைன் போதைப்பொருள் அடங்கிய 90 வில்லைகளை விழுங்கிய நிலையில் நாட்டை வந்தடைந்த உகாண்டா பிரஜை ஒருவர் விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (13) சந்தேகத்துக்கிடமான பயணி சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சந்தேகநபரை ஸ்கேன் பரிசோதனைக்குட்படுத்திய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் கொக்கைன் வில்லைகளை விழுங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்த இரகசிய தகவல் ஒன்றுக்கமைவாக மேற்படி சோதனை நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.இந்நிலையில் விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் வில்லைகளை இயல்பாகவே வெளியேற்றியுள்ளார். அவற்றிலிருந்து 161 கிராம் கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதன் சந்தைப் பெறுமதி 7.245 மில்லியன் ரூபா என சுங்க அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வயிற்றில் மீதமுள்ள வில்லைகளை வெளியேற்றுவதற்காக அதிகாரிகள் சந்தேகநபரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.கைதான நபர் 43 வயதுடைய உகாண்டா பிரஜை என தெரியவந்துள்ளது. அவர் உகாண்டாவின் என்டெப்பே நகரில் வைத்து சுமார் 90 கொக்கைன் வில்லைகளை விழுங்கியுள்ளதுடன், அங்கிருந்து கட்டார் தோஹா விமான நிலையத்தின் ஊடாக, கட்டார் எயர்வேஸ் கிவ்ஆர் – 664 என்ற விமானத்தின் மூலம் ஞாயிற்றுக்கிழமை (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சந்தேகநபரால் கடத்திக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் சுமார் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி மிக்கது எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஆகியன மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.