பேரினவாத சிந்தனை செறிந்த ஒரு நபரிடம் அல்லது கட்டமைப்பிடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படும்போது எமது மக்களின் நலன்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதைத் தவிர்க்கமுடியாது. எம்மை நாமே ஆளவேண்டும். அதற்கு அதிகாரப்பகிர்வும், சுயநிர்ணய உரிமையும் அவசியமாகும் என என சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட எழுச்சிப்பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன் (24) பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டிருப்பதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் சட்டத்தரணி ஐங்கரன் மேலும் கூறியிருப்பதாவது:

ஆட்சியிலிருந்தபோது பயங்கரவாதத்தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி எமது குரல்வளைகளை நசுக்கிய அதே நாமல் ராஜபக்ஷ, இப்போது பயங்கரவாதத்தடைச்சட்டம் தமிழர்களுக்கு எதிராக முறையற்ற விதத்தில் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறார்.

எதிர்க்கட்சியாக வீதிகளில் அலைந்தபோது பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டம் எனப் போராட்டம் செய்த, தாம் ஆட்சிபீடமேறினால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவோம் என வாக்குறுதியளித்த அநுரகுமார திசாநாயக்க தற்போது பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி பலரைத் தடுப்புக்காவலில் வைத்திருக்கிறார்.

எம்முடைய அரசியல் பயணத்தை இவ்வாறானவர்களைத் தவிர்த்து முன்னெடுக்கமுடியாது என்பதே நடைமுறை யதார்த்தமாகும். இருப்பினும் எமக்கு உள்ள சில அதிகாரங்களையும், எமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மிகச்சிறிய அளவிலான பிரதிநிதித்துவத்தையும் ஒட்டுமொத்தமாக அவர்களிடம் கையளித்துவிட்டு எமது போராட்டத்தை முன்னெடுக்கமுடியாது.

தேசிய மக்கள் சக்திக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ஒவ்வொன்றும் எமது உரிமைக்குரலை நலிவடையச் செய்திருக்கிறது என்ற விடயம் கடந்த ஒன்றரை வருடங்களில் பல தடவைகள் வெளிப்பட்டிருந்தாலும், கடந்த வாரம் இடம்பெற்ற சொல்லிசைப் பாடகரின் கைது அதனை மேலும் புடம்போட்டுக் காட்டியிருக்கிறது.

சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை சகல இடங்களிலும் வேரூன்றியிருக்கும் அரச மற்றும் அரசாங்கக் கட்டமைப்பில் எமக்கான குரலாக நாம் தான் இருக்கவேண்டும் என்பதனை அவர்களே எமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அவர்களிடம் அதிகாரங்கள் இருக்கும்போது போராட்டங்களை முன்னெடுப்பது மாத்திரமே எமது வாழ்க்கை என மாறிவிடும். இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வருங்காலங்களில் நாம் சிந்தித்து வாக்களிப்பது எமது இருப்புக்கு அவசியமாகும்.

மாகாணங்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால், இரும்புக்கடைக்கு விற்கப்பட்டிருக்கவேண்டிய பேரூந்து அனலைதீவுக்கு வழங்கப்பட்டமை போன்ற செயற்பாடுகளைத் தவிர்த்திருக்கமுடியும். அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு போன்ற விடயங்கள் வெறும் தேர்தல் கோஷங்கள் அல்ல. எமக்கான சேவைகளையும் வசதிகளையும் பொறுப்புக்கூறல் பொறிமுறையையும் எமக்கு அருகில் கொண்டுவருதன் ஊடாக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தமுடியும்.

பேரினவாத சிந்தனை செறிந்த ஒரு நபரிடம் அல்லது கட்டமைப்பிடம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படும்போது எமது மக்களின் நலன்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதைத் தவிர்க்கமுடியாது. எம்மை நாமே ஆளவேண்டும். அதற்கு அதிகாரப்பகிர்வும், சுயநிர்ணய உரிமையும் அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார்.