அனுராதபுரம் மாவட்டத்தில் யானை - மனித மோதலைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், புதிதாக 359 கிலோமீற்றர் நீளமான மின்வேலியை அமைப்பதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனுராதபுர வலையப் பணிப்பாளர் டபிள்யூ. எம். கே. எஸ். சந்திரரத்ன தெரிவித்துள்ளார்.

இம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் யானை - மனித மோதல் பிரச்சினை பொதுவாகக் காணப்படும் நிலையில், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஏற்கனவே 678 கிலோமீற்றர் நீளமான மின்வேலிகள் அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அனுராதபுரம் மாவட்டத்தின் ரொறவப்பத்தானை, கெப்பித்திகொல்லாவ மற்றும் மதவாச்சி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிய மின்வேலிகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 கிலோமீற்றர் நீளமான மின்வேலி அமைத்து முடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனுராதபுர வலையத்திலுள்ள 22 வனஜீவராசிகள் அலுவலகங்களுக்கும் அரசாங்கத்தினால் புதிய கெப்  வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பன வழங்கப்படவுள்ளன.

இதன்மூலம் வனஜீவராசிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களின் போது மக்களுக்கு விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க முடியும் என வலையப் பணிப்பாளர் சந்திரரத்ன மேலும் தெரிவித்தார்.