மக்களுக்காக சிறைக்குக் செல்ல நேரிட்டாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் சம்பந்தப்பட்ட நபர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளேன் என்று புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை (26) பொலிஸ் நிலையத்தில் அழைப்பு விடுக்கப்பட்டதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்தத் தாக்குதல் கிராம மக்களால் நடப்பட்டது என்று டில்வின் சில்வா போன்ற தரப்பினர் கூறுவது முற்றிலும் பொய்யானது. இது தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர்கள் யாரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பன்னிப்பிட்டிய, பத்தரமுல்ல, தலாஹேன மற்றும் மாலபே போன்ற வெவ்வேறான தூரப் பிரதேசங்களிலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் டில்வின் சில்வாவின் அலுவலகத்துக்கு அருகில் இந்தத் தாக்குதல் மிகவும் திட்டமிட்ட முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூர்யப்பெரும பொது மக்களின் வரிப்பணத்தில் 80 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதுடன், திறைசேரியிலிருந்த 2.5 மில்லியனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து கேள்வி எழுப்புவதற்காக சென்ற போது பெலவத்தை பகுதியில் ஆயுதங்களுடன் வந்த குழுவினர் எம்மை கொடூரமாக தாக்கினர். இந்த வன்முறைச் சம்பவம் குறித்து பொலிஸில் அனைத்து காணொளி ஆதாரங்கள், புகைப்படங்கள், மற்றும் தொலைப்பேசி எண்களுடன் ஒரு மாதத்துக்கு முன்னரே முறைப்பாடு செய்திருந்தும் தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
தற்போதைய பொலிஸ் துறை மற்றும் நீதித்துறை அரசாங்கத்தின் தேவைகளுக்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது. சிறைச்சாலைகளில் அடைப்பதன் மூலமோ அல்லது அச்சுறுத்துவதன் மூலமோ இந்த போராட்டத்தை முடக்கி விடமுடியாது. நாட்டில் நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதற்காக சிறைக்குக் செல்ல நேரிட்டாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் வரையிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரையிலும் எங்களது போராட்டம் தொடரும். மேலும், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான தங்களது போராட்டம் ஒருபோதும் நின்று விடாது. தங்களை அச்சுறுத்தலாம் என்று டில்வின் சில்வாவும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் நினைத்தால் அது அவர்களின் பகற்கனவாகவே முடியும்.