கியூபா குடியரசுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள புதிய பொருளாதாரத் தடை விரிவாக்கத்தையும் அதன் மூலம் முன்னெடுக்கப்படும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னணி சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மத்திய குழுவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் மிக விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்
கடந்த 2026 ஜனவரி 29 ஆம் திகதி அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட புதிய நிறைவேற்று உத்தரவானது கியூபா மீதான பொருளாதாரத் தடையை மேலும் ஒரு படி மேலாகத் தீவிரப்படுத்தியுள்ளது. கியூபாவுடன் சட்டபூர்வமான வர்த்தக உறவுகளைப் பேணும் இறைமையுள்ள ஏனைய நாடுகளைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதற்கும் தண்டிப்பதற்கும் இந்த உத்தரவு முற்படுகிறது.
குறிப்பாக கியூபாவின் எரிபொருள் விநியோகம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளை இலக்கு வைப்பதன் மூலம் ஒரு அப்பட்டமான பொருளாதாரப் போர் மற்றும் ஏகாதிபத்திய அடக்குமுறையை அமெரிக்கா உலக நாடுகளின் மீது திணிக்கிறது.
கியூபாவை ஒரு அசாதாரண மற்றும் விசித்திரமான அச்சுறுத்தல் எனப் பிரகடனம் செய்து அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அது பெரும் ஆபத்து எனக் கூறுவது முற்றிலும் நகைப்பிற்குரியதும் அபத்தமானதுமாகும். கியூபா போன்ற ஒரு சிறிய நாடு தனது தற்காப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் எடுக்கும் முயற்சிகளை இவ்வாறாகச் சித்தரிப்பது சர்வதேசச் சட்டங்களையும் உலகளாவிய பொதுமக்களின் கருத்துக்களையும் அமெரிக்க ஆளும் வர்க்கம் எவ்வளவு தூரம் அவமதிக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கியூப மக்கள் சட்டவிரோதமான மற்றும் மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடைகளால் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். ஒரு நாடு தனக்கான சுதந்திரமான சோசலிசப் பாதையைத் தெரிவு செய்த ஒரே காரணத்திற்காக அந்த நாட்டு மக்கள் அனைவரையும் பட்டினி போட்டு வதைக்கும் இந்தச் செயல் ஒரு கூட்டுத் தண்டனை ஆகும். இந்த புதிய தடையானது ஏனைய நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கும் ஒரு சர்வதேச மிரட்டல் ஆகும். இதன் மூலம் உலக வர்த்தகத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயல்கிறது.
கியூபா ஒருபோதும் எந்தவொரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. மாறாக கியூபா தனது மருத்துவக் குழுக்கள் மூலம் உலக நாடுகளுக்கு அரும்பணியாற்றியுள்ளது. பேரிடர் நிவாரணங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளை வழங்குவதன் மூலம் குறிப்பாக உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு கியூபா ஒரு சிறந்த நண்பனாக இருந்து வருகிறது. உண்மையில் கியூபாவினால் அல்ல அமெரிக்காவின் இத்தகைய மேலாதிக்க நடவடிக்கைகளினாலேயே பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தமது இறைமைக்காகவும் கௌரவத்திற்காகவும் போராடும் கியூப மக்களின் மன உறுதியை இத்தகைய பொருளாதார அழுத்தங்களாலோ அல்லது பொய்ப் பிரசாரங்களாலோ ஒருபோதும் உடைத்துவிட முடியாது. இந்த இக்கட்டான சூழலில் உலகெங்கிலும் உள்ள முற்போக்கு சக்திகள் தொழிலாளர் இயக்கங்கள் மற்றும் சோசலிசக் கட்சிகள் கியூபாவுக்கு எதிரான இந்த அநீதியான பொருளாதாரத் தடையை முறியடிக்க ஒன்றிணைய வேண்டும்.
கியூபப் புரட்சி கியூப மக்களின் இறையாண்மை மற்றும் அவர்களது சுயநிர்ணய உரிமைக்கான நீதியான போராட்டத்திற்கு முன்னணி சோசலிசக் கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
கியூபா மீதான தலையீடுகளை நிறுத்து! அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை உடனடியாக நீக்கு! ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சர்வதேச ஒற்றுமை ஓங்குக! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கியூப மக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்போம் என அந்த அறிக்கையின் ஊடாக முன்னணி சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.