அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்டின்-பெர்க்ஸ்ட்ராம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பஹாமாஸ் நோக்கிப் பயணித்த 'லியர்ஜெட் 60' வகையைச் சேர்ந்த தனியார் சிறிய ரக விமானம், புளோரிடாவில் குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 09 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் 12:50 மணி அளவில், தெற்கு புளோரிடாவின் பாம் பீச் கவுண்டி பகுதியில் உள்ள கிரெஸ்டேவன் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் விமானம் செங்குத்தாக விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானிகள் உட்பட 09 இந்தச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தரைப்பகுதியில் பொதுமக்கள் யாரும் உயிரிழந்ததாகவோ அல்லது காயமடைந்ததாகவோ இதுவரை தகவல்கள் இல்லை.

விபத்து காரணமாக ஏற்பட்ட தீ மற்றும் விமானத்தின் உதிரிபாகங்கள் பரவியதைத் தொடர்ந்து, சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 குடியிருப்பாளர்கள் அவசரமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்க போக்குவரத்துக் செயலாளர் ஷான் டஃபி இந்தச் சம்பவத்தை "கோரமான துயரம்" எனக் குறிப்பிட்டிருப்பதுடன், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு சபை மற்றும் அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.