ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் நுர்லான் யெர்மெக்பாயேவ் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுரா கருணாதிலக ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இன்று (20)  நடைபெற்றது.

2001ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்குள் 10 உறுப்பு நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இலங்கை இந்த அமைப்பின் ஒரு கலந்துரையாடல் பங்காளியாக இணைந்துகொண்டுள்ளது. இது சர்வதேச, அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பாக செயற்படுவதுடன், புவியியல் ரீதியிலான பரப்பளவு மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப உலகிலுள்ள மிகப்பெரிய பிராந்திய அமைப்பாகவும் விளங்குகின்றது.

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரதானமாக எல்லை மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கியிருந்த போதிலும், தற்போதைய நிலையில் வர்த்தகம், பொருளாதாரம், போக்குவரத்து மற்றும் முதலீட்டு துறைகளுக்காகவும் அது பங்களிப்பினை வழங்கி வருகின்றது. இந்நிலையிலே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வளாகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் நுர்லான் யெர்மெக்பாயேவ் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் இலங்கைக்கு இந்த அமைப்பின் பூரண அங்கத்துவத்தை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். அத்துடன் இலங்கை அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முதலீட்டு துறையின் ஊடாக தம்மால் உதவிகளை வழங்க முடியும். போக்குவரத்து துறையின் அடுத்த அமைச்சர்கள் கூட்டத்துக்கு இலங்கையின் போக்குவரத்து அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்படும். இலங்கையிலுள்ள சுற்றுலா முகவர் நிலையங்களை சீனாவுக்கு அழைத்து, அவர்களை ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு அழைத்துச் சென்று சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

துறைமுகத் துறையில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற ரீதியில் மேற்கொள்ளப்படும் சேவைகள் பாராட்டுக்குறியது. ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடுத்த துறைமுகம் மற்றும் போக்குவரத்து மற்றும் விநியோக மேலாண்மை பிரதானிகளின் கூட்டத்துக்கு அமைச்சருக்கு அழைப்பு விடுப்பதற்கும் தனது விருப்பத்தை வெளியிட்டார்.

இதன்போது அமைச்சர் அனுரா கருணாதிலக தெரிவிக்கையில்,

துறைமுக அதிகாரசபையின் பிரதானிகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை அந்த கூட்டத்திற்கு அனுப்பி வைப்ப நடவடிக்கை எடுக்கிறேன். அரசாங்கம் துறைமுகங்களின் கொள்ளளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதனால் இத்துறைக்குத் தேவையான தொழில்நுட்ப போக்குவரத்து உதவிகளை வழங்குமாறும் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.