அரசாங்கத்திடம் ஏதேனும் தவறுகள் நிகழும்போது, அவற்றைச் சரி செய்வதற்குப் பதிலாகத் தனது அகங்காரத்தையே வெளிப்படுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
தற்போது இலங்கையை நெருங்கியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த கால அனர்த்தங்களின் போது அரசாங்கத்தின் இயலாமை தெளிவாக வெளிப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மக்களின் உயிர்களைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வருவதில்லை என்றும், எனவே அனர்த்த அபாயத்தை உணர்ந்து மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி முன்வைத்த வாக்குறுதிகள் இன்று பொய்யாகி வருவதாகவும், அவற்றை நியாயப்படுத்துவதற்கு ஒரு குழுவினர் கடுமையாக முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்களுக்கு ஆட்சியாளர்களின் அநீதியான போக்கே காரணம் எனக் கூறியவர்கள், இன்று அதனை இயற்கையான நிகழ்வாகக் காட்ட முற்படுவதாகக் கூறினார்.
மேலும், தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி, மின்சாரக் கட்டணக் குறைப்பு மற்றும் உகண்டாவில் பணம் இருப்பதாகக் கூறப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட பல பொய்களை மூடிமறைக்க அரசாங்கம் தற்போது முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் மக்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாகவும் சம்பத் அத்துகோரள குற்றம் சுமத்தினார். அத்துடன், சப்புகஸ்கந்த மற்றும் சூரியகந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் அரச இயந்திரம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வித் துறையிலும் பாரிய குழப்பங்கள் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகளில் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீடு இருப்பதாகவும், 6 ஆம் தர பாடப்புத்தக விவகாரத்தின் மூலம் அது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டுபிடிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று பாடப்புத்தகத்தில் தவறிழைத்தவர்களைத் தேடி சிஐடி வரை செல்ல வேண்டியிருப்பது கவலைக்குரியது என்றார்.
இந்த அரசாங்கம் ஒருபோதும் தனது தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்தப் போவதில்லை என்றும், அவர்களின் அகங்காரப் போக்கையே மக்கள் இன்று காண்கிறார்கள் என்றும் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கம் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள முன்வராத அகங்காரப் போக்கையே கடைப்பிடிக்கிறது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space