அரசுப் பணிகளில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இனி தமிழ் வழியில் கல்வி படித்தமைக்கான முன்னுரிமை வழங்கும் திருத்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் குறித்த திருத்தச் சட்ட முன்வடிவை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்தார்.
அதன் நோக்க காரண உரையில் கூறியிருப்பதாவது: அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப் பணியிடங்களிலும் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டம், 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின்கீழ் முன்னுரிமை நியமனத்துக்கு தகுதியற்றவர்கள் என்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தெளிவு படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இனிவரும் காலங்களில் புதிதாக பணிக்கு சேருபவர்களுக்கு மட்டுமே தமிழ்வழியில் கல்வி பயில்வதற்கான முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கெனவே, அரசுப் பணியில் நியமிக்கப்பட்ட நபர்கள், மிகை ஊதியம் கொண்ட பதவிகளில் குறிப்பிட்ட காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எனினும், 2010-ம் ஆண்டு முதல் இதுவரை தமிழ் வழி முன்னுரிமையில் நடைபெற்ற பணிநியமனங்கள் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவு இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளது.
அரசுப் பணிகளில் தமிழ்வழி கல்விக்கு முன்னுரிமை: புதிய திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space