கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 48 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மறு ஆய்வு செய்து அரசு மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான படிகள் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
20 ஆண்டுகள் கடந்த மூத்த முதுநிலை மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவப் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
இதற்காக, பல்வேறு அரசு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து, அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை (FOGDA) உருவாக்கி சுகாதாரத் துறை செயலர், அமைச்சருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கூட்டமைப்பு சார்பில் கடந்த 12-ம் தேதிமுதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 20 ஆயிரம் மருத்துவர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.
அடுத்த கட்டமாக 48 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு மருத்துவர்கள் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம், அகிலன், சுந்தரேசன் ஆகியோர் கூறுகையில், “கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் மேற்கொண்டனர்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அரசு மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து, `திமுக அரசு அமைந்தவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என்று உறுதியளித்தார்.
ஆட்சி அமைந்தவுடன், `மக்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று சொன்னார். கரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழக மக்களை தனியார் மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அரசு மருத்துவர்கள் காப்பாற்றினர். இதுவரை அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
அரசு மருத்துவர்கள் 48 மணி நேர உண்ணாவிரதம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space