நாடளாவிய அரச வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளில் 94.66 சதவீதமானவை தற்போது கையிருப்பில் உள்ளன. உயிர்காக்கும் 13 வகையான மருந்துகளும் எவ்வித தட்டுப்பாடுமின்றி வைத்தியசாலைகளில் இருக்கின்றன என  சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்  நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எஸ்.எம். மரிக்கார் எம் பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாடளாவிய அரச வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளில் 94.66 சதவீதமானவை தற்போது கையிருப்பில் உள்ளன. உயிர்காக்கும் 13 வகையான மருந்துகளும் எவ்வித தட்டுப்பாடுமின்றி வைத்தியசாலைகளில் இருக்கின்றன. அதன்படி, 618 வகையான அத்தியாவசிய மருந்துகளில் 585 வகையான மருந்துகள் தற்போது அரச சுகாதார நிறுவனங்களில் கையிருப்பில் உள்ளன.வைத்தியசாலைகளின் அன்றாட செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக முன்னுரிமைப் பட்டியலில் உள்ள 886 வகையான அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பைப் பேண வேண்டியுள்ளது.மருந்து தட்டுப்பாடு ஏற்படும் சந்தர்ப்பங்களில் அதன் தாக்கத்தை குறைப்பதற்கும், கையிருப்பு நிலையை விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்கும் உள்ளூர் அவசரக் கொள்வனவுகளை மேற்கொள்ளவும் அரசாங்கம் தேவையான நிதியை ஒதுக்கியுள்ளது.அதேவேளை, சுகாதார அமைச்சின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தற்போது 8 மில்லியன் ரூபாவாக  குறைக்கப்பட்டுள்ளது. முன்னர் பில்லியன் கணக்கில்  காணப்பட்ட நிலுவைத் தொகைகள் தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.மின்சாரம், நீர் மற்றும் சலவைச் சேவைகளுக்காக மொத்தமாக 16,496 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 14ஆம் திகதி நிலவரப்படி அதில் 9,109 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியிருந்தது என்றார்.