தீவிர புயலாக உருவெடுத்த 'அர்னாப்' ஆந்திரப் பிரதேச மற்றும் ஒடிசா கடற்கரையை நெருங்கிய போது, NOAA-20 செயற்கைக்கோள் மூலம்   எடுக்கப்பட்ட இரவுநேரச் சாட்டிலைட் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் முதல் பெயரிடப்பட்ட சூறாவளி புயல்கள் உருவாகும். ஆனால் இந்த ஆண்டு, எல் நினோ (El Niño) காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் சுற்றுச்சூழல் நிலைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள் காரணமாக, அக்டோபர் 25 அன்று வங்காள விரிகுடாவில் சற்று தாமதமாகவே அர்னாப் புயல் உருவாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (27)    அதிகாலை 1:42 மணியளவில் NOAA-20 செயற்கைக்கோளில் உள்ள VIIRS (Visible Infrared Imaging Radiometer Suite) இந்த இரவு நேரப் படத்தை எடுத்தபோது, இந்திய வானிலை மையத்தின் (IMD) கூற்றுப்படி, புயலின் தொடர் காற்று வேகம் மணிக்கு சுமார் 140 கிலோமீற்றராக (85 மைல்கள்) இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அக்டோபர் 28 அதிகாலையில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்பகுதியில் அர்னாப் கரையை கடந்தபோது, அதன் தொடர் காற்று வேகம் மணிக்கு 130 கிலோமீற்றராக இருந்துள்ளது. IMD இந்த வலிமை கொண்ட புயலை "மிகக் கடுமையான சூறாவளிப் புயல்" (very severe cyclonic storm) என வகைப்படுத்துகிறது. இது சாபிர்-சிம்ப்சன் சூறாவளி காற்று அளவுகோலில் பிரிவு 1 ) புயலுக்கு இணையானது.

இது பெரிய நகரங்கள், விவசாய நிலங்கள் மற்றும் மீனவ சமூகங்கள் வாழும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியான பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

பசிபிக் பெருங்கடலின் பூமத்திய ரேகை பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பமான நீர்நிலைகள் காணப்படும் எல் நினோ (El Niño) என்ற காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் இப்புயல் உருவாகியுள்ளது. இந்த நிகழ்வு தோராயமாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது எனலாம்.