இலங்கையின் பொருளாதார மீள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்திற்கு இணையாக இலங்கையின் மீள்கட்டமைப்பு நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்வதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 5 துணை வேலைத்திட்டங்களின் கீழ் 620 மில்லியன் டொலர்கள் கொள்கை அடிப்படையிலான கடனைப் பெற்றுக்கொள்வதற்காக 2026 மார்ச் 16 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அக் கடன் தொகையில் 100 மில்லியன் டொலர்களைப் பயன்படுத்தி, தாங்குதிறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கின்ற பேரண்ட மீள்கட்டமைப்பு துறைசார் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு 2026 செப்டம்பர் 7 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்தது.
இதனைத் தொடர்ந்து, கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதற்கமைய, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிரந்தர பொது மூலதன வளங்கள் மூலம், 50 மில்லியன் டொலர் கொள்கை அடிப்படையிலான கடன் கூறு, 50 மில்லியன் டொலர் முதலீட்டுக் கடன் கூறு ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மொத்தம் 100 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கான இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.