சட்டவிரோதமாக  இரண்டு கோடியே நாற்பத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான  தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட இலங்கைப் பெண் பயணி ஒருவர், இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய தனியார் பாடசாலை ஆசிரியை எனத் தெரியவந்துள்ளது.

இவர் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலை 12.00 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-309 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறிய பைகளில், 436 கிராம் எடையுள்ள 04 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் மற்றுமொரு தங்க பிஸ்கட்டின் ஒரு பகுதியையும் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த தங்க பிஸ்கட்டுகளும், அவற்றை சட்டவிரோதமாகக் கொண்டு வந்த பெண் பயணியும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு நடைபெற்ற விசாரணைகளின் பின்னர்,  அப்பெண்ணுக்கு 25 இலட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.