ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக  17 பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹெராத் மாகாணத்தின் கப்கான் மாவட்டத்தில் வியாழக்கிழமை (01) ஏற்பட்ட அனர்த்தநிலை காரணமாக  ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பெரும்பாலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் மத்திய, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் வானிலை நிலவுவதால் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு  தேசிய பேரிடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் காரணமாக அடிப்படை கட்டமைப்புகள் சேதமடைந்ததுடன், கால்நடைகளும்  உயிரிழந்துள்ளன. மேலும் சுமார் 1,800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே நெருக்கடியான நிலையில் இருக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் மேலும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிலைமையை மதிப்பீடு செய்யும் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலதிக தேவைகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பேரிடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.