இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூரில்  உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குறைந்தது 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (22) மாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 'திருச்சூர் பூரம்' திருவிழாவிற்கான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது முதல் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விளைநிலங்களுக்கு மத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிய நிலையில், முதல் வெடிப்பைத் தொடர்ந்து தொடர்ச்சியான பல வெடிப்புகள் ஏற்பட்டன.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு செல்லும் வீதி வசதி குறைவாக இருந்ததால், தீயணைப்பு படையினர் அங்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெடிப்பின் அதிர்ச்சி பல கிலோமீட்டர் தூரம் வரை உணரப்பட்டதால், சிலர் இதனை நிலநடுக்கம் என தவறாக கருதியதாக கூறப்படுகிறது.

திருவம்பாடி மற்றும் பாமேக்காவு கோவில்களுக்கிடையில் நடைபெறும் திருச்சூர் பூரம் திருவிழாவின் வாணவேடிக்கை நிகழ்ச்சிக்காக இந்தப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாகவும், சுமார் 2,000 கிலோ வெடிபொருட்கள் சேமிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்தை கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே. ராஜன் பார்வையிட்டதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 இலட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன்தேவையானால் வெளிமாநில மருத்துவ நிபுணர்கள் கொண்டு வரப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.

இந்தியாவில் பட்டாசு தொழிலில் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவது தொடர்ச்சியான சவாலாக உள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவகாசி அருகே ஏற்பட்ட இதே போன்ற விபத்தில் 25 பேர் உயிரிழந்திருந்தனர்.

அதேபோல், 2016 ஆம் ஆண்டு கொல்லம் புற்றிங்கல் கோவில் விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கடுமையான வெப்பநிலை காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.