பூட்டானின் காசா மாவட்டத்தில் அமைந்துள்ள ஷிந்தாபு பனிப்பாறை ஏரி நேற்று வியாழக்கிழமை (28) மாலை திடீரென உடைந்துள்ளது. இதனால், பூட்டானிலிருந்து இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருவதால், இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோ சூ ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள பிரபலமான இயற்கை ஊற்றான காசா சாச்சு பகுதியில் இருந்த கட்டமைப்புகள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனினும், முன் கூட்டியே அந்தப்  பகுதியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

புனாகா பகுதியில் அமைந்துள்ள முக்கிய சூரிய மின்சக்தி நீர்ப்பாசனத் திட்டம் வெள்ளத்தால் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும், புனாகா – காசா நெடுஞ்சாலையும் சேற்றுக் கழிவுகளால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூட்டானில் அதிக அபாயம் கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 பனிப்பாறை ஏரிகளில் ஷிந்தாபு ஏரியும் ஒன்றாகும்.

இந்நிலையில், இந்திய மத்திய நீர் ஆணையத்தின் வெள்ள முன்னறிவிப்பு கண்காணிப்பு நிலையம் மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவார், டார்ஜிலிங், ஜல்பைகுரி மற்றும் கூச் பீகார் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூட்டானிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் சங்கோஷ் ஆற்றின் ஊடாக ஆறு முதல் எட்டு மணித்தியாலங்களுக்குள் இந்திய எல்லைப் பகுதிகளை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.