சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற இந்தோனேசியாவின் யானை சவாரிக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாகத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாடு தழுவிய அளவில் யானை சவாரிக்குத் தடை விதித்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையை இந்தோனேசியா பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'பீட்டா' அமைப்பு வெளியிட்ட இரகசிய விசாரணை காணொளிகள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
அந்த காணொளியில், சுற்றுலாப் பயணிகளைச் சுமந்து செல்லும் யானைகள் கூர்மையான இரும்புத் தோட்டியால் குத்தப்படுவதும், சங்கிலியால் பிணைக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுவதும் அம்பலமானது.
குறிப்பாக பாலி தீவில் உள்ள புகழ்பெற்ற யானை சரணாலயத்தில் இத்தகைய அநாகரிகமான முறைகள் கையாளப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தோனேசிய வனத்துறை அமைச்சு யானைச் சவாரிக்கு நாடு தழுவிய தடையை விதித்துள்ளது.
"யானைகளின் உடல் நலம் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இனி சுற்றுலாத் துறையில் யானைகளைச் சவாரிக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது" என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, பாலியின் புகழ்பெற்ற மேசன் யானை சரணாலயம் மற்றும் பாலி மிருகக்காட்சிசாலை போன்ற நிறுவனங்கள் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் சவாரிகளை நிறுத்திவிட்டன.
"யானைகளுக்கு இயற்கையான சூழலை வழங்குவதற்காக நாங்கள் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பிக்கிறோம்" என மேசன் யானை சரணாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும், இத்தடையானது யானைகளைத் தொடுதல், குளிப்பாட்டுதல் மற்றும் அவற்றிற்கு உணவளித்தல் போன்ற பிற சுற்றுலா நடவடிக்கைகளுக்குப் பொருந்தாது எனக் கூறப்படுகிறது.
இந்தோனேசிய அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை சர்வதேச விலங்கு நல அமைப்புகள் கொண்டாடுகின்றன.
பீட்டா அமைப்பின் ஆசியாவிற்கான தலைவர் ஜேசன் பேக்கர் தெரிவிக்கையில்,
"இந்தோனேசியா முன்மாதிரியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இந்தியாவைப் போலவே நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளும் இந்த வழியைப் பின்பற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் இந்தப் பதிவைப் பார்த்த அவுஸ்திரேலிய மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், "இது மிக நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய தீர்மானம்" எனவும், "மனிதர்களின் பொழுதுபோக்கிற்காக விலங்குகள் துன்புறுத்தப்படக் கூடாது" எனவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space