மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக மக்களின் நிலங்களை விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதில் எந்த நியாயமும் கிடையாது என்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
வலி. வடக்கு மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் காணி விடுவிப்புக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
37 ஆண்டுகளாக துப்பாக்கிமுனையில் அரசானது மக்களின் நிலங்களை அபகரித்து வைத்துள்ளது. இந்த அபகரிப்புக்கு எதிராக யுத்தத்தின் பின்னரான 17 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக எமது மக்கள் போராடி வருகின்றனர்.
மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.
இந்நிலையில் தற்போது நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும் எனக் கோரி போராடிக்கொண்டிருக்கின்றனர். இன்றும் வளமான மக்களுக்குச் சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இராணுவத்தினர் வசமுள்ளன.
இந்நிலங்களில் படையினர் தொழிற்சாலைகளை நடத்தியும் விவசாயம் மேற்கொண்டும் பிழைக்கின்றனர். மக்கள் வாழ முடியாதவர்களாக, குடியிருக்க நிலமற்றவர்களாக அலைகின்றனர். அரசாங்கம் தீர்வினை முன்வைக்காது வேடிக்கை பார்க்கின்றது.
மக்களின் அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க நாட்டில் பொறிமுறை இல்லை. சட்டபூர்வமான காணிகளைக் கொண்ட மக்கள் தமிழர்கள் என்ற காரணத்துக்காக இலங்கையில் எவ்வாறும் நடத்தப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகின்றது.
இலங்கை செய்திகள்
ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது இந்தப் பாதையில் தனியாக நடந்து சென்றார். ஆகவே இங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. யதார்த்தம் அப்படி காணப்படும்போது பொய்யாக படைத்தளங்களை நிறுவி அதற்கு பொதுமக்களின் காணிகளை கபளிகரம் செய்து ஓர் இனவாத முன்னெடுப்பே இங்கு நடக்கின்றது என்பதை வெளியுலகம் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே, உடனடியாக மக்களின் காணிகளை அரசாங்கம் மக்களிடத்தில் கையளிக்கவேண்டும். அத்துடன், அந்த காணிகளை இதுவரை காலமும் இராணுவத்துக்குப் பயன்படுத்தியமைக்கான நஷ்ட ஈட்டையும் மக்களுக்கு வழங்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.