மக்களின் போராட்டம் காரணமாகவே உத்தேச இரண்டு சட்டமூலங்களையும் தற்காலிகமாகவேனும் நிறுத்திவைக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், அரசாங்கம் தொடர்ந்தும் நாட்டை அழித்துவிடாமல் ஆட்சியைவிட்டு வெளியேற வேண்டும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிித்தார்.

மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் திங்கட்கிழமை (9) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக, பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. இது மக்கள் பெற்ற விசேட வெற்றியாகவே நான் கருதுகின்றேன்.

ஆனால், அரசாங்கம் இச்சட்டமூலங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது மட்டும் போதுமானதல்ல. மீண்டும் அந்தச் சட்டமூலங்களைக் கொண்டுவருவதாயின், பொதுமக்களின் கருத்தைக் கேட்டு, அறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் கலந்துரையாடி, சிவில் சமூகத்தின் கருத்துக்களின் அடிப்படையில் மட்டுமே அதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அனுராதபுரம் புனித நகரில் இளம் பௌத்த தேரர் ஒருவருக்கு பொலிஸ் அதிகாரி ஒருவரால் இழைக்கப்பட்ட அவமதிப்பை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு தேரவாத பௌத்த நாட்டில் இவ்வாறான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அத்துடன் அனுராதபுரம், கண்டி மற்றும் காலி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களை உலகச் சுற்றுலாப் பயணிகளுக்காக 'மறுபெயரிடுதல்' என்ற பெயரில், அவற்றின் பழமையான வரலாற்றையும் தேசிய கலாசார அடையாளத்தையும் அழிக்க அரசாங்கம் இப்போது முயற்சித்து வருகின்றது. இது மிகவும் பாரதூரமான ஒரு நிலைமையாகும்.

அதேநேரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதத்தை கல்விக்கு ஒதுக்குமாறு கோரியபோதிலும், கடந்த ஆண்டு 2.1 வீதம் மற்றும் இந்த ஆண்டு 1.97வீதம் என்ற மிகக் குறைந்த சதவீதத்தை ஒதுக்கியிருப்பதன் மூலம் அரசாங்கம் கல்வித் துறையில் முற்றாகத் தோல்வியடைந்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றது.

நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 16 மாவட்டங்கள் கஷ்டப் பிரதேசங்களாக மாறியுள்ள தற்போதைய சூழ்நிலையில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், மேலும் நாட்டை அழிக்காமல் உடனடியாக ஆட்சியை விட்டு விலகுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.