இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேம்படுத்தும் நோக்கில், 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இயங்கும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையையும், 1995 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தையும் ஒன்றிணைத்து மீள் கட்டமைப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் மேம்பாட்டிற்காக இந்த இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக சேவைகளை வழங்கி வந்தாலும், ஒருங்கிணைந்த கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் வளங்கள் வீணடிக்கப்படுவதும், கொள்கை ரீதியான முரண்பாடுகள் ஏற்படுவதும் அவதானிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பிரதமர் செயலாளரின் தலைமையிலான அரச நிறுவனங்கள் தொடர்பான குழுவினர் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், மேற்படி இரண்டு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, கடந்த மார்ச் 17, 2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த இணைப்பு தொடர்பான முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த அங்கீகாரத்தின் பிரகாரம், நிதி முகாமைத்துவம் மற்றும் இதர சட்டரீதியான பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகம் எடுத்துள்ளது. இதன்படி, இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்காக, 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும், அதற்கு சட்ட உயர்வை வழங்குவதற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பு மாற்றமானது, எதிர்காலத்தில் நாட்டின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேலும் வினைத்திறனுடனும், முறைமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்கும் என்றார்.