மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகள் மற்றும் மோதல்கள் காரணமாக இலங்கையின் பிரதான ஏற்றுமதித் துறைகள் வீழச்சியை கண்டுள்ளன. எனினும் மாற்றுத் துறைகளின் பாரியளவிலான வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய நம்பிக்கை அளித்துள்ளது என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகளாவிய ரீதியில் நிலவி வரும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இலங்கையின் பாரம்பரியமற்ற ஏற்றுமதித் துறைகள் கடந்த 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் வியக்கத்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதித் துறைகளான ஆடை உற்பத்தித் துறை 7.4 சதவீதத்தாலும் தேயிலைத் துறை 5.5 சதவீதத்தாலும் நறுமணப் பொருட்கள் துறையில் 3.3 சதவீதத்தாலும் வீழ்ச்சியை கண்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னடைவுக்கு மத்தியிலும் நாட்டின் புதிய மாற்றுத் துறைகளின் பாரிய வளர்ச்சி இலங்கை பொருளாதாரத்துக்கு புதியதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் பன்முகப்படுத்தப்பட்ட ஏற்றுமதித் துறைகள் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
அதற்கமைய மின்னணு மற்றும் மின்சார உபகரணங்களின் உற்பத்தித் துறை 43 சதவீத வளர்ச்சியையும் பெறுமதி அதிகரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள் உற்பத்தித் துறை 31 சதவீத வளர்ச்சியும் மருத்துவப் பொருட்கள் உற்பத்தியில் 30 சதவீத வளர்ச்சியையும் அடைந்துள்ளன.
மேலும் கனிமங்கள் சார்ந்த பொருட்கள் 35 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதுடன் தென்னை உற்பத்தி பொருட்கள் 21 சதவீத வளரச்சியையும் தரம் பிரிக்கப்படாத உணவுப் பொதிகள் 64 சதவீதம் என்ற பெருமளவிலான வளரச்சியையும் பதிவு செய்துள்ளது.
இதேவேளை நாட்டின் சேவைத் துறைகளிலும் பாரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இலங்கையின் டிஜிட்டல் துறை 22 சதவீத வளரச்சியைக் கண்டுள்ளதுடன் நிதித் துறை 64 சதவீதம் என்ற மாபெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் எட்டப்பட்டுள்ள இவ்வளர்ச்சி இலங்கையின் பொருளாதாரப் பன்முகத்தன்மைக்கு கிடைத்த ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
நிதானத்துடன் இலக்கை நோக்கி முன்னேறுவோம் என்று ஆரம்பத்தில் 10 சதவீத ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காக கொண்டிருந்த போதிலும், தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் 7 சதவீதத்தும் அதிகமான பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்து கொள்ள வலுவான தலையீடுகளும் திட்டங்களும் முன்னெடுத்து வருகின்றன.
இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதித் துறையை வெறும் தேயிலை ஆடைத் தொழிலோடு மட்டுப்படுத்தாமல் அதனை தாண்டியும் புதிய துறைகள் ஊடாக ஏற்றுமதியை பன்முகப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும் என்றார்.