நாட்டில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 46,000 சிறுவர்களுக்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கம் உடனடியாக களமிறங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு வழிகாட்டல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் தாமதம், எதிர்கால தலைமுறைக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அவர் சாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சிறுவர் உரிமைகள் சம்பந்தமாக செயற்படும் சிவில் அமைப்பின் நீதி கோரல் மகஜரிலும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் மற்றும் சுஜீவ சேரசிங்க, கவிந்த ஜயவர்த்தன ஆகியோர் கையொப்பமிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
இன்று நமது நாட்டில் சிறுவர் வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளான 46,000 பேர், சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை காத்துக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் அநீதிகளுக்கு ஆளான சிறுவர்களுக்கு, அவர்களது சிறுவர் பருவத்திலேயே அதற்குரிய நீதி கிடைக்கவில்லை என பல அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த 46,000 பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதியை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏன் இத்தனை தாமதம் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகவே, இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதைத் தாமதிக்காமல், துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் இன்னல்களுக்கு ஆளான சிறுவர்களுக்காக உரிய நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கம் சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புப் பற்றி மேடைகளில் உயர்வாகப் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்தப் பேச்சுக்களைச் செயலில் காட்ட வேண்டும். 2019 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு வழிகாட்டல் கொள்கை ஆரம்பிக்கப்பட்டு, அது 2025 ஆம் ஆண்டளவில் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போதைய அரசாங்கமோ அதனை 2029 ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
2024 ஆம் ஆண்டு மக்கள் ஆணையைப் பெற்று, சிறுவர் தலைமுறையைப் பாதுகாப்பதற்காகக் கிடைத்த வாய்ப்பை, 2029 இல் நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? இது சிறுவர் தலைமுறைக்கு இழைக்கப்படும் பாரதூரமான அநீதியாகும்.
நீதிமன்றத்தில் தற்போது நீதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் கீழ் 4,000 வழக்குகள் காணப்படுகின்றன. அவற்றை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தாமதங்களை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு வழிகாட்டல் கொள்கையை இந்த வருடத்திலேயே நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்க்கட்சி தனது பூரண ஆதரவைத் தரும். தேங்கிக் கிடக்கும் 46,000 முறைப்பாடுகளை உடனடியாக விசாரணை செய்து நீதியை நிலைநாட்டுங்கள்.
அதற்காகத் தேவையான விசேட பிரிவுகள், சட்ட ஏற்பாடுகள் மற்றும் விசேட பணிக்குழுவொன்று ஜனாதிபதியின் நேரடித் தலைமையில் இயங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் தெளிவான, முறையான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என நான் இங்கு யோசனை முன்வைக்கிறேன். பாதிக்கப்பட்ட இந்த 46,000 சிறுவர்களுக்காகவும் நீதியை நிலைநாட்டுவதற்கு எனதும், ஐக்கிய மக்கள் சக்தியினதும் முழுமையான ஆதரவை நாங்கள் வழங்குவோம்.
இதனை ஒரு அரசியல் பிரச்சினையாகப் பார்க்காமல், நாட்டின் எதிர்கால சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.