இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கும் இடையிலான புக் விசேட கலந்துரையாடல் வியாழக்கிழமை (02.04.2026) மாலை யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உப தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் மற்றும் வடக்கின் அனைத்து வலயங்களினதும் கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றக் கொள்கைகளை உருவாக்குவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. ஆசிரியர் இடமாற்றக் கொள்கை தயாரிக்கப்பட்டு வடக்கு மாகாணப் பிரதம செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தொழிற்சங்கங்களை அழைத்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து அதன் பின்னர் இறுதி செய்யப்படும். இடமாற்றக் கொள்கை மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, அதிபர் இடமாற்றக் கொள்கையானது தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்டு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட இடமாற்றக் கொள்கை தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆசிரியர்களின் சம்பள உயர்வு, பதவி உயர்வுகளில் ஏற்படும் கால தாமதங்கள் மற்றும் ஓய்வூதியம் கிடைப்பதில் நிலவும் தாமதங்கள் குறித்தும் இக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.