இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தின் பிரகாரம், அதன் முழு அதிகாரமும் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கே இருக்கிறது. ஆனால் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அதன் அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருகிறார். அதற்கு இடமளிக்க முடியாது. அதேநேரம் கபில சந்திரசேனவின் மரண வாக்கு மூலத்தின் பிரகாரம் பணிப்பாளர் நாயகத்துக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) கூட்டு எதிர்க்கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

சிறிலங்கா எயார்வைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த கபில சந்திரசேன, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது, அவர் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் அச்சுறுத்தப்பட்டதாக, அவரது மரண சான்றிதழில் தெளிவாக தெரிவி்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுதொடர்பில் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்திடம் இது தொடர்பில் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை  வழிநடத்துவது அதன் தலைவரோ அல்லது ஆணையாளர்களோ அல்ல. பணிப்பாளர் நாயகமாகும்.  அனைத்து அதிகாரங்களையும் தன்னிச்சையாகத் தனது கைகளில் எடுத்துக்கொண்டு ஆணைக்குழுவைக் கட்டுப்படுத்துகிறார், அச்சுறுத்துகிறார், மனிதர்களைத் தூக்கிலிட்டுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடுகிறார். பணிப்பாளர் நாயகத்தின் இத்தகைய செயல்பாடு, கபில சந்திரசேனவின்  சத்தியக்கடதாசியின் படி ஒரு பெரிய முரண்பாடாகும். பணிப்பாளர் நாயகம் என்பவர் ஒரு நிறைவேற்று அதிகாரி ஆவார். அவர் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களின் கீழ் இயங்குபவர். ஆனால் தற்போது பணிப்பாளர் நாயகம் மேலேயும், ஆணையாளர்கள் கீழேயும் இருக்கிறார்கள்.

எந்தவொரு காரணத்திற்காகவும் பணிப்பாளர் நாயகம் இந்த அனைத்து அதிகாரங்களையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, ஒரு சர்வாதிகாரியைப் போல இலங்கையின் சட்டத்தைக் காலால் மிதித்து, இந்நாட்டு மக்களின் உயிரைப் பணயம் வைத்து, மனிதர்களை மரண நிலைக்குத் தள்ளுவதற்கு எமது சட்டத்தின் கீழ் எவ்வித இடமும் இல்லை.

அப்படியாயின், இந்த ஆணையாளர்களால் இன்னும் எவ்வாறு அமைதியாக இருக்க முடியும்? இது எதேச்சையாக எங்கோ ஒரு இடத்தில் பொறுப்பற்ற முறையில் கூறப்பட்ட ஒரு கூற்று அல்ல. அந்தச் சத்தியக்கடதாசியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற, முறையான மற்றும் உடனடி விசாரணையை நடத்துவதற்கு ஆணைக்குழுவின் தலைவரும் ஆணையாளர்களும் கடமைப்பட்டுள்ளனர். அது அவர்களின் பொறுப்பு. கண்களை மூடிக்கொண்டு தூங்குவதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

இது தொடர்பான முழுமையான பொறுப்பு பாராளுமன்றத்தினால் ஆணைக்குழுவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான பொறுப்புக்கூறல் அவர்களுக்கு மட்டுமே உள்ளது. எமது சட்டத்தின்படி, அதனைப் பணிப்பாளர் நாயகத்திடமோ அல்லது வேறு எந்தவொரு நிறைவேற்று அதிகாரியிடமோ ஒப்படைப்பதற்கு ஆணைக்குழுவிற்கு எந்தவொரு உரிமையோ அல்லது அதிகாரமோ இல்லை. சட்டத்தின் முன்னிலையில் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

சட்டத்தின் முன்னிலையில் பதிலளிப்பதற்கு ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது. இன்றோ, நாளையோ அல்லது எப்போதாவது ஒரு நாள் அந்தப் பொறுப்பின்படி செயல்படாவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். ஆணைக்குழுவிற்கு அது நிச்சயமாக நடக்கும். அதுவே சட்டத்தின் இறையாண்மையாகும் என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிடுகையில், சுயாதீன ஆணைக்குழுக்கள் இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொலிஸ், லஞ்ச ஊழல் ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்படுவதில்லை.

குற்ற விசாரணை திணைக்களமும் எதிர்க்கட்சியினருக்கு எதிரான முறைப்பாடுகளை மாத்திரம் விசாரணை செய்துவருகிறது. அரசாங்கத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் எந்த விசாரணைகளையும் இவர்கள் மேற்கொள்வதில்லை. இந்த போக்கு மிகவும் பாரதூரமானதாகும் என்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஊழல் எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்கும் கடந்த கால தவறுகளை தேடவுமே பயன்படுத்தி வருகிறது. அரசாங்கத்தின் மோசடிகளுக்கு எதிராக அந்த சட்டத்தை பயன்படுத்துவதில்லை.

அதேநேரம்  நிலக்கரி கொள்வனவு மோசடி திறைசேரியின் 2.5 மி்ல்லியன் டொவர்மோசடி போன்ற பல மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் அவை தொடர்பில் எந்த விசாரணைகளையும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இதுவரை ஆரம்பிக்கவில்லை என்றார்.