இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது வைத்தியர்களுடன் மேற்கொண்ட இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி ஏமாற்றியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசேகர சாடியுள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் திங்கட்கிழமை (5) ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
"வைத்தியர்களுக்கான 'டேட்' (DAT) கொடுப்பனவு, போக்குவரத்துத் தீர்வு மற்றும் 'விசேட வைத்திய சேவை' நிறுவுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மூன்று மாத காலப்பகுதியில் நிறைவேற்றுவதாக வழங்கிய எழுத்துப்பூர்வ வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. நிதி அமைச்சுடன் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகளைச் சுகாதார அமைச்சு வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது. வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் மனிதவள நெருக்கடிக்குத் தீர்வுகாணாது அரசாங்கம் நழுவிச் செல்கிறது.
ஆகையால் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. ஏற்கனவே வைத்தியர்கள் ஒரு சில கடமைகளிலிருந்து விலகியிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். திறைசேரி செயலாளருடன் இடம்பெற இருந்த பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டுள்ளமையால், தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்தகட்டத்தில் ஈடுபடுவது தொடர்பில் இன்று அவசர மத்திய செயற்குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அரசாங்கம் எமது கோரிக்கைக்குச் செவிசாய்க்காதுவிடின் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்" என்றார்.
இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்போம் என கூறி வந்த அரசாங்கம் வைத்தியர்களை ஏமாற்றியுள்ளது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space