இலங்கையில் வாழும் சாதாரண முஸ்லிம் சமூகத்தை நாம் மனதார நேசிக்கிறோம். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழும் முழு உரிமை உண்டு. ஆனால், அதற்குள் மறைந்திருக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாம் தீர்க்கமாக தோற்கடிக்க வேண்டும் என கலகொடஅத்தே ஞானசார தேரர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை (10) கண்டிக்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
தற்போதைய பௌத்த சாசன ரீதியான வீழ்ச்சி மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதற்காக தயாரிக்கப்பட்ட முக்கிய பிரேரணையை அவர்களிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேசிய மற்றும் சாசன ரீதியான சூழ்நிலைகள் தொடர்பாக, கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பல்வேறு தளங்களில் பணியாற்றும் அனுபவமிக்க மகா சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட கொள்கை வகுப்பில் நீண்ட அனுபவமுள்ள பல தரப்பினருடன் நாம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினோம்.
இந்தக் கலந்துரையாடல்களின் முடிவில், தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கான முக்கிய பிரேரணை ஒன்றை தயாரித்துள்ளோம். அதனை மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய இரு தரப்பு மகாநாயக்க தேரர்களுக்கும் கையளித்து, இது தொடர்பான உத்தியோகபூர்வ ஆலோசனைகளை ஆரம்பிப்பதற்காகவே நாம் இன்று இங்கு வருகை தந்தோம்.
கடந்த காலங்களில் இந்த நாட்டில் சாசன ரீதியான பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவர். அதேபோன்று விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துகளை திருத்துவது குறித்து நாடு தழுவிய ரீதியில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.
மறுபுறம், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு, உண்மைத் தன்மையை மறைப்பதற்கான போட்டி ஒன்று இரண்டு தரப்புகளுக்கு இடையே நிலவுவதை அவதானிக்க முடிகிறது. இது தவிர, பாடசாலை பாடத்திட்டங்களில் உள்ள குறைபாடுகள் குறித்தும் நாம் விரிவாக ஆராய்ந்துள்ளோம்.
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் விவகாரத்தில் நாம் தலையிட்டமை தொடர்பில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நாம் முஸ்லிம் சமூகத்தை நேசிக்கிறோம், ஆனால் இஸ்லாமிய தீவிரவாதத்தை முற்றாக எதிர்க்கிறோம். முஸ்லிம் சமூகத்தை நாம் பாதுகாக்க வேண்டும், அதேவேளை இஸ்லாமிய தீவிரவாதத்தை தீர்க்கமாக தோற்கடிக்க வேண்டும்.
சுரேஷ் சலே ஒரு முஸ்லிம் இனத்தவர் என்ற போதிலும், ஒரு இராணுவ அதிகாரி என்ற ரீதியில் அவருக்காக மகா சங்கத்தினர் முன்னின்றதையிட்டு பெருமையடைகிறோம். அவர் முஸ்லிம் என்பதற்காக அவரை எம்மால் நிராகரிக்க முடியாது.
கடந்த காலத்தில் கேணல் முத்தாலிப் போன்ற பல மலே இன முஸ்லிம் தலைவர்கள் இந்த நாட்டின் இறையாண்மைக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளனர். அத்தகைய தேசப்பற்றாளர்கள் வாழும் முஸ்லிம் சமூகத்தை நாம் மதிக்கிறோம்.
சுரேஷ் சலேயை பொறுத்தவரையில் அவர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒழுக்கமாக பணியாற்றிய ஒரு அதிகாரி ஆவார். அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் பெற்ற போதிலும், நாட்டின் பாதுகாப்பையே அவர் தனது இறுதி இலக்காகக் கொண்டிருந்தார். ஆனால் யாராக இருந்தாலும் தவறிழைத்திருந்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால், தற்போதைய பிரச்சினை அதனை விடவும் ஆழமானது. இன்று உலகம் முழுவதும் மிக மோசமான தீவிரவாதம் பரவி வருகிறது. இங்கிலாந்தில் முஸ்லிம் - கிறிஸ்தவ மோதல்களும், பிரான்ஸ் மற்றும் இத்தாலியிலும் இவ்வாறான மத மோதல்களும் நிலவுகின்றன. ஒட்டுமொத்த ஆபிரிக்க பிராந்தியம், பங்களாதேஷில் பௌத்த - இஸ்லாமிய மோதல்கள், இந்தியாவில் ஹிந்து - முஸ்லிம் மோதல்கள் என உலகம் முழுவதும் இந்த நெருக்கடி நீடிக்கிறது.
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 300 இற்கும் மேற்பட்ட எமது நாட்டு மக்கள் உயிரிழந்தனர், 500 இற்கும் மேற்பட்டோர் ஊனமுற்றனர். சஹ்ரான் போன்ற தீவிரவாதிகள் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அவற்றை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதை விடுத்து, தற்போதைய மற்றும் கடந்தகால அரசியல் தரப்பினர் இதனை முழுமையாக அரசியல்மயமாக்கி வருகின்றனர். இதனால் நாட்டில் தேவையற்ற சந்தேகங்களும், குரோத உணர்வுகளுமே வளர்கின்றன.
அதனால்தான், மகாநாயக்க தேரர்கள் வீற்றிருக்கும் இந்த புனித பூமியில் இருந்து கொண்டு, கத்தோலிக்க திருச்சபையின் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட தரப்பினருக்கு நான் இப்போதும் சவால் விடுக்கிறேன். முஸ்லிம் சமூகம் என்பது வேறு, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் 1953 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பாடசாலை பாடத்திட்டங்கள் ஊடாக குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, கௌரவ ஜனாதிபதி அவர்களே, நீங்களும் உங்களது அரசாங்கமும் எதிர்ப்புக்குரல் எழுப்புவதை விடுத்து இவ்விடயத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். கடந்தகால அரசாங்கங்களும் இந்த தீவிரவாதத்தின் முன்னிலையில் மௌனமாகவே இருந்தன. ஆகவே, சதிவலைகளில் சிக்கி இந்த நாட்டை மேலும் ஆபத்தில் தள்ளிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
மகா சங்கத்தினராகிய நாம் எப்போதும் அகிம்சை வழியிலேயே தீர்வுகளை எதிர்பார்க்கிறோம். பௌத்த தர்மத்தில் வன்முறைக்கு இடமில்லை. நாடு ஆபத்தில் இருக்கும் போது பௌத்த துறவிகளுக்கு வரலாற்று ரீதியான பொறுப்புகள் உண்டு. அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.
கத்தோலிக்க திருச்சபையும் தற்போதைய அரசியல்மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தேசிய மற்றும் சாசன ரீதியான வீழ்ச்சிக்கும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இஸ்லாமிய தீவிரவாதத்துக்கும் அரசியல் ரீதியாக தீர்வு காண முடியாது. மத ரீதியான கோட்பாடுகளை கலந்துரையாடல்களுக்கு உட்படுத்துவதன் மூலமே இதற்கு நிலையான தீர்வை எட்ட முடியும் என்றார்.