அமெரிக்க இராணுவம் ஈரானில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான பண்டார் அப்பாஸில் உள்ள இராணுவத் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் நான்கு தற்கொலைத் தாக்குதல் ட்ரோன் விமானங்களையும் தனது படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.
பண்டார் அப்பாஸ் நகரில் உள்ள தளம், ஐந்தாவது ட்ரோன் ஒன்றை ஏவுவதற்குத் தயாராக இருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நகரின் கிழக்கு பகுதியில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் பலவீனமான போர்நிறுத்த உடன்பாடு மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்தை முடக்கி, உலகளாவிய எரிசக்தி விலைகளை உயர்த்திய மூன்று மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நீண்டகால பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களில் அமெரிக்கா ஈரானில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். இந்தத் தாக்குதல்கள் தற்காப்புக்காகவே நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறினாலும், புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த மோதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.