ஈரானுக்கு எதிராக திங்கட்கிழமை (26) இராணுவத் தாக்குதல் நடத்தப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பாரிய தாக்குதலை முன்னெடுக்கக்கூடும் என ட்ரம்ப் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஈரானுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதா அல்லது இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதா என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை முழுமையாக நிராகரிக்கவில்லை.
இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் ஈரான் – அமெரிக்க மோதலால் சர்வதேச எண்ணெய் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கட்டார் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றத்தைத் தணித்து, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.