உக்ரேனுக்கு எதிரான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, அதன் மீதான பொருளாதாரத் தடைகளையும் அழுத்தங்களையும் தீவிரப்படுத்த பிரான்சில் கூடியுள்ள ஜி7 உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இம்மாநாட்டின் இடையே உக்ரேன் ஜனாதிபதியை நேரில் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா இனிமேலும் பிடிவாதம் பிடிக்காமல் "சமாதான உடன்படிக்கையை செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

பிரான்சின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெறும் இந்த 3 நாள் ஜி7 உச்சிமாநாட்டில், உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி விசேட அழைப்பாளராகக் கலந்துகொண்டுள்ளார். முதலாம் உலகப் போரை விடவும் நீண்டுகொண்டே செல்லும் இந்த உக்ரேன் போர்க்களத்தில், உக்ரேன் படைகள் வலுவாக எதிர்கொண்டு நின்றபோதிலும், ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களால் உக்ரேன் நகரங்கள் தொடர்ந்து பேரழிவைச் சந்தித்து வருவதை ஜெலென்ஸ்கி உலகத் தலைவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாநாட்டின் பின்னணியில் பிரான்ஸ் இராஜதந்திர வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி,

ரஷ்யாவின் பிரதான வருவாய் ஆதாரங்களான மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தின் மீது மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜி7 தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் , ரஷ்யாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றிச் செல்லும் பிரம்மாண்ட கப்பல்கள் மீது புதிய தடைகளை அறிவித்துள்ளார்.

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி ரஷ்யா தனது எரிபொருள் மீதான மேற்கத்திய தடைகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தும் 'நிழல் கப்பல் படை' சார்ந்த 160 நிறுவனங்களுக்கு எதிராகப் புதிய தடைகளை விதித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் இணக்கமான உறவை வளர்க்க முயன்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது மொஸ்கோவின் பிடிவாதப் போக்கினால் தனது பொறுமையை இழந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

ஜெலென்ஸ்கியைச் சந்தித்த பின் ஊடகவியலாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இரு தரப்பிலும் வரலாறு காணாத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஒட்டுமொத்தப் போரும் முற்றிலும் முட்டாள்தனமானது. எனவே, இந்தப் போரை நிறுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ரஷ்யா உடனடியாக உடன்படிக்கைக்கு வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ரஷ்ய  புட்டின் இம்மாநாட்டிற்கு வர மறுத்துவிட்டதாகத் தெரிவித்த ஜெலென்ஸ்கி, அமெரிக்காவில் வைத்து புட்டினைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ட்ரம்பிடம் ஆலோசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் போருக்கு அப்பால், அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி ஒப்பந்தம் குறித்தும் ஜி7 மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்ட பின்னர், டெஹ்ரானில் பதவியேற்றுள்ள புதிய தலைமைத்துவம் "மிகவும் பகுத்தறிவுள்ள மனிதர்களாக"  இருப்பதாக ட்ரம்ப் வர்ணித்துள்ளார். எனினும், ஈரான் எக்காரணம் கொண்டும் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்றும், மீறினால் அந்நாடு சாம்பலாக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

மேலும், லெபனானில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற 'ஹெஸ்பொல்லா' அமைப்பைக் கட்டுப்படுத்துவதற்கு, சிரியாவின் தற்போதைய ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா மூலம் இஸ்ரேல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ட்ரம்ப் யோசனை தெரிவித்துள்ளார். சிரியாவின் புதிய அதிபரான ஷாராவிற்கு ஹெஸ்பொல்லா அமைப்பை சுத்தமாகப் பிடிக்காது என்றும், அவர் ஒன்றும் "அப்பாவி பாய் ஸ்கவுட் அல்ல", காரியக்காரர் என்றும் ட்ரம்ப் விசித்திரமான முறையில் குறிப்பிட்டுள்ளார்.