உக்ரேன் போர்க்கள பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிறிய பறவைகளின் கூடுகள், நான்கு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் இந்தப் போர், அங்குள்ள இயற்கைச் சூழலை எந்தளவிற்கு மாற்றியமைத்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



 





ஆளில்லா வான்வழித் தாக்குதல் ட்ரோன்களை இயக்குவதற்காகப் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட அதிநவீன ஒப்டிக் பைபர் கேபிள்களைப் பயன்படுத்திப் பறவைகள் தங்களின் கூடுகளை வேய்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவின் பலமாய் விளங்கிய தாங்கிகள் மற்றும் பீரங்கிகளை எதிர்கொள்ள உக்ரேன் ட்ரோன் தொழில்நுட்பத்தில் தீவிர கவனம் செலுத்தியது.

எதிரிகளின் மின்னணு ஜாமிங் கருவிகளால் ட்ரோன்களை முடக்க முடியாமல் தடுக்க, உக்ரேன் மற்றும் ரஷ்ய படைகள் இந்த மிக மெல்லிய ஒப்டிக் பைபர் கேபிள்களைப் பயன்படுத்தி ட்ரோன்களை வழிநடத்துகின்றன.

சுமார் 20 கிலோ மீற்றர் நீளம் வரை நீளக்கூடிய இந்த கேபிள்கள், 1,200 கி.மீ நீளமுள்ள போர்க்களப் பகுதியின் மரங்கள், வயல்வெளிகள் மற்றும் நகரங்களின் கூரைகளில் சிலந்தி வலைகளைப் போலக் சிதறிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கைவிடப்பட்ட இந்த கேபிள்களைப் பறவைகள் தங்களின் கூடுகளை கட்டுவதற்குப் புற்களுடன் சேர்த்துப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக கியவ் போர் அருங்காட்சியகத்தின்  சிரேஷ்ட ஆய்வாளர் யானா ஹிரின்கோ தெரிவித்துள்ளார்.

உக்ரேனிய இராணுவத்தினர் முன்வரிசையிலிருந்து இத்தகைய இரண்டு கூடுகளை அருங்காட்சியகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

ஒப்டிக் பைபர் துண்டுகளைக் கொண்ட பறவைக் கூடுகள், தற்போதைய நவீனப் போரின் வடிவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நமக்கு உணர்த்துகின்றன என ஹிரின்கோ குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த கூடுகளை எந்தவகைப் பறவைகள் கட்டின அல்லது இந்த நீண்ட கேபிள்களை அவை எவ்வாறு சேகரித்தன என்பது குறித்து இன்னும் துல்லியமாகத் தெரியவில்லை.

டொனெட்ஸ்க், கார்கிவ் மற்றும் சப்போரிஷியா ஆகிய பகுதிகளில் இத்தகைய கூடுகளைக் கண்டறிந்த உக்ரேனிய இராணுவ வீரர்கள், அவற்றின் படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்தக் கூடுகளில் ஒன்று கியவ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் வேளையில், மற்றொன்று மேலதிக ஆய்விற்காக நெதர்லாந்திற்கு அனுப்பப்படவுள்ளது.

செயற்கைப் பொருட்களைக் கொண்டு பறவைகள் கூடுகட்டுவது குறித்து ஆய்வு செய்யும் நெதர்லாந்தின் லைடன்  நகர உயிரியலாளர் ஆக்-புளோரியன் ஹியெம்ஸ்ட்ரா,

"உக்ரேனில் பறவைகளின் பல்லுயிர் பெருக்கம் அதிகமாக உள்ளது. இந்தக் கூட்டை உண்மையில் எந்தப் பறவை கட்டியது என்பதைக் கண்டறிய, கூட்டிற்குள் இருக்கும் பறவையின் டிஎன்ஏ தடயங்களை நாங்கள் சோதிக்கவுள்ளோம். நான் எனது வாழ்நாளில் பல நூறு பறவைக் கூடுகளைப் பார்த்திருக்கிறேன், ஆனால் இப்படி ஒன்றைப் பார்ப்பது இதுவே முதல்முறை."

இந்த கேபிள்கள் பறவைகளுக்குப் பாதகமாகவும், சாதகமாகவும் அமையலாம். பறவைகளின் கால்கள் இதில் சிக்கி அவை காயமடைய வாய்ப்புள்ளது. அதேநேரம், இந்தக் கேபிள்கள் கூடுகளை மிகவும் வலிமையாக்கப் பயன்படலாம்.

இந்தக் கூடுகளை ஆவணப்படுத்துவதன் மூலம், உக்ரேனின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மீது போர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உலகிற்குத் தெளிவுபடுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.