ராயக்கோட்டை அருகே தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு பணியின்போது, நீர் சுத்திகரிப்புத் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வன்னியபுரத்தில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள நானோ வடிகட்டுதல் தொட்டியில் (நுண்ணிய தண்ணீர் சுத்திகரிப்பு) பராமரிப்பு மற்றும் துப்புரவுப் பணி மேற்கொண்ட போது, ஒப்பந்த தொழிலாளர்களான தருமபுரி மாவட்டம் பெல்ராம்பட்டியை சேர்ந்த சாரதிகுமார் (25), பஞ்சபள்ளி தின்னூரை சேர்ந்த அக்மல் (28), அனுமந்தபுரம் அருகே உள்ள ஜம்பூத் பகுதியைச் சேர்ந்த காவேரி (30) ஆகியோர் உயிரிழந்தனர்.

இவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்று காலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திரண்ட, குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: உயிரிழந்த 3 பேரும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனவே இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம், எனக் கூறினர்.

மேலும், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.அனிதா மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்த நிறுவனம் சார்பில் அனைத்து தொழிலாளர்கள் பெயரிலும் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே இறந்தவர்களின் குடும்பத்திற்கு விரைவில் காப்பீட்டு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

பின்னர், 3 தொழிலாளர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டன. இந்த போராட்டத்தால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரபரப்புடன் காணப்பட்டது.

50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தபிறகே 3 பேரும் எப்படி இறந்தார்கள் என்கிற முழுமையான தகவல் வெளியாகும் என போலீஸார் தெரிவித்தனர்.