உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை எவ்வித நியாயமான காரணங்களுமின்றி நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் தன்னிச்சையான முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும், அது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் உள்ளடக்கிய அவசரக் கூட்டமொன்றைக் கூட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் எழுத்துப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு இன்று (7) அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்திலேயே நாமல் ராஜபக்‌ஷ இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தற்போதைய அரசாங்கமானது எவ்வித ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது நியாயமான காரணங்களும் இன்றி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு முயற்சிப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

அரசாங்கத்தின் இந்தத் தன்னிச்சையான நடவடிக்கை நாட்டின் சட்டத்தின் ஆட்சியை முற்றிலுமாக சீர்குலைப்பதுடன், எமது தாய்நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகச் செயல்முறைக்கும் பெரும் அச்சுறுத்தலையும் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புகள் தங்களது கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ள சூழ்நிலையில், இலங்கையின் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் மதிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு, இதற்கு எதிராக மிக வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என நாங்கள் கருதுகிறோம்.

இதற்கமைய, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, இந்த பாரதூரமான நிலைமை குறித்து விவாதிப்பதற்கான அவசரக் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், அத்துடன் ஏனைய பொருத்தமான மற்றும் தகுதியான அரசியல் தலைவர்களையும் இக்கலந்துரையாடலுக்கு அழைப்பது மிகவும் பொருத்தமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். இந்த மிக முக்கியமான விடயம் தொடர்பாக உங்களின் உடனடி அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கிறேன் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.