அண்மைய ஆண்டுகளில் ஊழல் ஒழிப்பு தொடர்பான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களில் இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை அடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ, இருப்பினும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த யோசனைகளால் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் நாடு அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் பலவீனமடைந்துவிடாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 7 ஆம் கட்ட மீளாய்வு மற்றும் உறுப்புரை 4 தொடர்பான இவ்வாண்டுக்கான கலந்தாய்வு என்பன நாட்டுக்கு வருகைதந்திருந்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளினால் கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், இலங்கையின் நிலைவரம் தொடர்பான தமது மதிப்பீடு குறித்து கடந்த புதன்கிழமை (23) கொழும்பிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவான் பபஜோர்ஜியோ தலையிலான குழுவினர் தெளிவுபடுத்தினர்.
இதன்போது இலங்கை அதன் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தற்போதைய ஒட்டுமொத்த நகர்வு நேர்மறையானதாகவும், ஊக்கமளிப்பதாகவும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
அதேவேளை 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்புச்சட்டமானது ஊழலுக்கு எதிரான இலங்கையின் சட்டக்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் பங்காற்றிய முக்கிய மைல்கல் எனச் சுட்டிக்காட்டிய அவர், 'இருப்பினும் கடந்த ஜுலை மாதம் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட உத்தேச திருத்தங்களில் உள்ள சில சரத்துக்கள் இந்தச் சட்டத்தை ஆக்கபூர்வமானதாக மாற்றிய முக்கிய சில கூறுகளைப் பலவீனப்படுத்தக்கூடும்' எனக் கரிசனை வெளியிட்டார்.
மேலும் ஏற்கனவே அடையப்பட்டுள்ள முன்னேற்றத்தை தலைகீழாக மாற்றுவதைத் தவிர்க்கும் வகையில், கரிசனைக்குரிய விடயங்கள் மிகுந்த அவதானத்துடன் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.