தேர்தல் காலத்தில் இனவாதிகள், படுகொலையாளிகள், அரச நிதி மோசடியாளர்கள் அனைவரும் தம்முடன் ஒன்றிணைவார்கள் என்று தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமை எதிர்க்கட்சியின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. இதுவே இவர்களின் கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வெளியக காரணிகளால் அத்;தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை. வாழ்க்கைச் செலவுகளை குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளினார்கள். பொருளாதார மீட்சிக்கு எவ்வித வழியும் இல்லாத நிலையில் இறுதி தீர்வாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது.நிலையான பொருளாதார மீட்சிக்காக கடுமையான தீர்மானங்களை செயற்படுத்த வேண்டியுள்ளது.

பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது முன்னேற்றமடைந்துள்ளது என்பதை சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது.ராஜபக்ஷர்களின் வங்குரோத்தான பொருளாதார கொள்கையினால் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டது.ஆனால் தற்போது நிதி ஸ்திரத்தன்மையினால் இலங்கை உயர் -நடுத்தர வருமானம்  பெறும் நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய ராஜபக்ஷர்கள் பொருளாதார மீட்சிப் பற்றி பேசுகிறார்கள். நாட்டு மக்கள் உண்மையை அறிவார்கள். இனிவரும் காலப்பகுதிகளில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைவடையும்.அதற்கான நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

தேர்தல் காலத்தில் இனவாதிகள், படுகொலையாளிகள், அரச நிதி மோசடியாளர்கள் அனைவரும் தம்முடன் ஒன்றிணைவார்கள் என்று தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளமை எதிர்க்கட்சியின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. இதுவே இவர்களின் கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும்.

அரச நிதியை மோசடி செய்தவர்கள் மற்றும் படுகொலையாளர்களை கைது செய்யும் போது எதிர்க்கட்சியினர் கலக்கமடைகிறார்கள். புதிய கூட்டணி அமைக்கிறார்கள்.இவர்களின் அரசியல் கூட்டணியை மக்கள் ஏற்க போவதில்லை என்றார்.