எதேச்சாதிகார, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியற்ற உண்மையான ஜனநாயக நாட்டிற்காக அரசியல் பேதமின்றி ஒன்றிணைவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
"இலங்கை சிவில் சமூகங்களின் பயணப் பாதை” எனும் தொனிப்பொருளில் இலங்கையில் அமைந்து காணப்படும் சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைக்கும் விசேட நிகழ்வொன்று இன்று (6) கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
சமகாலத்தில் ஜனநாயகம் வலுப்பெறுவதற்குப் பதிலாக, ஜனநாயக வழிமுறைகளும் விழுமியங்களும் சீர்குலைந்து, சீர்குலைக்கப்பட்டு வருகின்ற ஒரு தருணத்தில், ஜனநாயகத்திற்குப் பதிலாக சர்வாதிகாரத்தையும் எதேச்சாதிகாரத்தையும் தனிக் கட்சி ஆட்சியையும் முன்னிறுத்தும் செயற்பாட்டாளர்களுக்கு மத்தியில், நாட்டில் உள்ள சிவில் சமூக அமைப்புகளை ஜனநாயகத்தை வலுப்படுத்தும் மிகப்பெரிய பிணைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டே இச்சந்திப்பு நடத்தப்படுகின்றது.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் இந்தப் பயணத்தில் சிவில் சமூக அமைப்புகளைப் போலவே சுதந்திர ஊடகங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இது ஒரு தேர்தலுக்கான ஆயத்தமோ, கூட்டணிகளை உருவாக்கும் நடவடிக்கைகளோ அல்லது அரசியல் சக்திகளைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளோ அல்ல. மாறாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக சிவில் சமூக இயக்கத்தின் பங்களிப்பை மேலும் பலப்படுத்தும் ஒரு வலுவான பயணத்திற்காகவே இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
ஜனநாயகம் என்பது தேர்தலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் உருவாக்கப்படும் அரசாங்கத்தின் செயற்பாடுகள், தொடர்ச்சியான கொள்கை உருவாக்கங்களின் போது மக்கள் மையப்படுத்தப்பட்டு, மக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்த்தல் போன்ற விடயங்களை நோக்கும்போது, ஜனநாயகம் என்பது தேர்தல் காலத்தில் வாக்களிப்பது மாத்திரமன்றி, அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமை மற்றும் பங்களிப்புடன் கூடிய அரச நிர்வாகம் என்பனவும் இதில் முக்கியம் பெறுகின்றன.
அரசியல்வாதிகள் சிவில் சமூக அமைப்புகள் தொடர்பில் பேசும்போது அவநம்பிக்கையே நிலவுகிறது. அரசியல்வாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சிவில் சமூகத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றே பலரும் நினைக்கின்றனர்.
அண்மைக்கால வரலாற்றில் இவ்வாறு அரச அதிகாரத்தைப் பெற்றவர்கள் சிவில் சமூக அமைப்புகளை மறந்துவிட்டனர். மாதுலுவாவே சோபித தேரர் உள்ளிட்ட பல்வேறு சிவில் செயற்பாட்டாளர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகச் சேவையாற்றிய போதிலும், இறுதியில் அவர்கள் மதிக்கப்படாத ஒரு நிலை உருவானது. இந்த கசப்பான கடந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
எமது நாட்டில் ஜனநாயகத்தை மிகவும் வலுவாக முன்னெடுப்பதற்கான 'தேசிய மக்கள் இணக்கப்பாடு' ஒன்றில் கையெழுத்திட்டு, நாட்டின் சட்டதிட்டங்கள் ஊடாக இந்த உடன்படிக்கைக்கு உயிர் கொடுத்து, நாட்டின் சட்ட விதிகள் மூலம் இந்த சிவில் சமூக இயக்கத்திற்கு புதிய புத்துயிர்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
தற்சமயம் அரசியலமைப்பு பேரவையில் கூட சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூவர் அங்கம் வகிக்கின்றனர். அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமையின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் இங்கு ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் எமது நாட்டிற்குத் தரம் குறைந்த நிலக்கரி கப்பல் கப்பலாக வரவழைக்கப்பட்ட சமயங்களில், சிவில் சமூக அமைப்புகள் சரியான அரசியல் கொள்கையுடன் நின்று, வலுசக்தி அமைச்சரையும், அமைச்சின் செயலாளரையும் வீட்டிற்கு அனுப்புவதற்கு பக்க பலத்தை நல்கின. சிவில் சமூகம் இன்றி இப்பயணத்தை மேற்கொண்டிருக்க முடியாது. ஆட்சி நிர்வாகத்திற்கு சவால் விடுப்பது மிகவும் முக்கியமானது.
இந்த சிவில் சமூக அமைப்புகள் தொடராக எழுப்பிய குரலினாலேயே அண்மையில் பெறுமதி சேர் வரி விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தோற்கடிக்கப்பட்டன. 159 பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இதற்குப் பலமான சிவில் சமூக அமைப்புகளினது சவாலே காரணமாக அமைந்து காணப்பட்டது.
நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாகப் பேசியதன் காரணமாக, இந்த சவால்கள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டன. இந்த போராட்டத்தின் உரத்த குரலுக்குச் செவிசாய்க்க அரசாங்கத்திற்கு நேர்ந்தது.
நீதித்துறையின் சுதந்திரம், அங்கீகாரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கு மரண அடி கொடுக்கும் வகையில், பதவிகளில் வெற்றிடங்கள் நிலவும் நிலையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி, நீதித்துறையில் தலையிடும் ஒரு செயலாக அமைந்து காணப்படுகின்றது. இது மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் அல்ல. இதன் மூலம் ஜனநாயகத்தின் இறுதிச் சடங்கே தீர்மானிக்கப்படும்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வழக்கமான மூன்று தூண்களுக்கு மேலதிகமாக சுதந்திர ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் இன்றியமையாதவையாக அமைந்து காணப்படுகின்றன.
ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது போல, அடிப்படை உரிமைகள் குறித்து புதியதொரு வரைவிலக்கணம் அவசியமாக காணப்படுகின்றது. தீவிர இடதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி கருத்துக்களின் சிறந்த பண்புகளை உள்வாங்கி, பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் மட்டுமன்றி, கல்வி, சுகாதாரம், குறைந்த செலவிலான மின்சாரம், பொருளாதார உரிமை, மத, சமூக, அரசியல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்றவையும் அடிப்படை உரிமைகளாக மாற்றப்பட வேண்டும். தென்னாபிரிக்க அரசியலமைப்பில் கூட இது உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.