எபோலா வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து, இலங்கைக்குள் வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தயார்படுத்தல் நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பரேரா தெரிவித்தார்.
இலங்கை மருத்துவ சங்கத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
"எபோலா என்பது ஆர்.என்.ஏ வகை வைரஸ் ஆகும். இது உலக அளவில் மிக அரிதாகவே காணப்படுகின்ற போதிலும், காலத்துக்குக் காலம் உலகின் சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் மாத்திரம் தொற்றுநோய் வடிவில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டது. இம்முறை ஏற்பட்டுள்ள தொற்றுப் பரவலுக்கு எபோலா வைரஸின் ஒரு பிரிவான 'புண்டிபுஜியோ' எனப்படும் வைரஸ் வகையே காரணமாக அமைந்துள்ளது.
இந்த எபோலா நோயின் சராசரி மரண வீதமானது நூற்றுக்கு 50 காணப்படுகின்றது. இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச மருத்துவக் குழுக்கள் இந்நோய் குறித்து மிகவும் அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்பட்டு வருகின்றன. இந்நோயானது மனிதர்கள், கொரில்லா மற்றும் குரங்குகள் போன்ற மனிதன் அல்லாத விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.
எபோலா வைரஸானது சுவாசக் தொகுதி ஊடாகப் பரவும் ஒரு நோய் அல்ல. மாறாக, இது பாலுறவு அல்லது நேரடித் தொடுகையின் மூலம் பரவக்கூடிய ஒரு தொற்றாகும். பாதிக்கப்பட்ட மனிதர்களின் அல்லது இந்த வைரஸ் தொற்றியுள்ள விலங்குகளின் இரத்தம், உடல் திரவங்கள் அல்லது சுரப்புகள் என்பன நமது உடலுக்குள் நேரடியாக நுழைவதாலோ அல்லது நேரடித் தொடுகை ஏற்படுவதாலோ மாத்திரமே இந்நோய் மற்றுமொருவருக்குத் தொற்றுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்தி, அவசரத் தயார்நிலை குறித்த ஒத்திகைகளையும் முன்னெடுத்துள்ளனர். அத்துடன், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, எபோலா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளான கொங்கோ மற்றும் உகண்டா ஆகிய நாடுகளிலிருந்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடாக இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் குறித்து நாம் விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றோம்.
இதற்கென சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் விசேட தனிமைப்படுத்தல் பிரிவு செயற்பட்டு வருகின்றது. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் உள்ள எமது சுகாதாரப் பணிமனைகளின் அதிகாரிகள் மூலம் இப்பயணிகள் அனைவரும் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அது குறித்த தகவல்கள் உடனடியாக தொற்றுநோய்ப் பிரிவுக்கு அறியத்தரப்படும்.
ஒருவேளை இந்நோய்க்கான அறிகுறிகளுடன் எவரேனும் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டால், அவர்களைப் பொறுப்பேற்று சிகிச்சை அளிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட தேசிய சுகாதார நிறுவனமான 'ஐடிஎச்' தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை தற்போது முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பான ஆய்வகப் பரிசோதனை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்நிலையில் உள்ளது என்றார்.