எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, கொள்கலன்  போக்குவரத்து கட்டணங்களை பாரியளவில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய டீசல் விலை உயர்வு மற்றும் தாமதக் கட்டணங்களைக் கருத்திற்கொள்ளும் போது, கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 350% முதல் 400% வரை அதிகரிக்கக்கூடும் என அந்தச் சங்கத்தின் செயலாளர் இனாம் கபூர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு கொள்கலனை விடுவிப்பதற்கு  தற்போது குறைந்தபட்சம் 4 முதல் 5 நாட்கள் வரை எடுக்கிறது. இக்காலப்பகுதியில் ஒரு லொறிக்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபா வீதம் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விநியோகத்திற்காக ஒரு கொள்கலன் லொறிக்கு வழக்கமாக 25,000 ரூபா வாடகை அறவிடப்படுகிறது. எனினும், 5 நாட்கள் தாமதம் ஏற்படும் போது 75,000 ரூபா வரை மேலதிகக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

தற்போது டீசல் விலை சுமார் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வாடகை மற்றும் தாமதக் கட்டணங்களை இணைத்துப் பார்க்கும் போது ஒட்டுமொத்த அதிகரிப்பு 400 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விடுமுறை காலம் நெருங்கி வருவதால், துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை விரைவாக விடுவித்து அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க வேண்டியது அவசியமாகும். எனினும், இந்த விலை உயர்வு மற்றும் தாமதங்கள் காரணமாக சந்தையில் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை எவ்விதத் தாமதமுமின்றி மக்கள் அனுபவிப்பதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இலங்கை சரக்கு போக்குவரத்து சேவைகள் சங்கம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.