நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு எரிவாயுத் தேவையையும் தடையின்றி பூர்த்தி செய்வதற்குத் தமது நிறுவனம் முழுமையாகத் தயாராக உள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு எரிவாயு தொடர்பில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு பற்றாக்குறை மற்றும் விநியோகம் குறித்து விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்தையில் லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயுவை விநியோகிக்க முடியாத ஒரு சூழல் நிலவியபோதிலும், ஒட்டுமொத்த சந்தையின் நுகர்வோர் தேவையையும் தனியாகப் பொறுப்பேற்று ஈடுசெய்யக்கூடிய வகையில் லிட்ரோ நிறுவனம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட எரிவாயுக் குறைபாடுகளைச் சீரமைப்பதற்குச் சில நாட்கள் தேவைப்பட்டபோதிலும், தற்போதைய சந்தைத் தேவையை விடவும் மிக அதிகமான அளவில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்காக மாத்திரம், நவம்பர் மாதத்தை விடவும் அதிகளவாக 45,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் 44,000 மெட்ரிக் தொன் எரிவாயு முன்பதிவு செய்யப்பட்டபோதிலும், அந்த முழு அளவும் விற்பனையாகாமல் டிசம்பர் முதலாம் திகதியளவில் கையிருப்பில் ஒரு தொகை எஞ்சியிருக்கும்.
அந்த எஞ்சிய கையிருப்புடன் புதிதாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள 45,000 மெட்ரிக் தொன்னும் இணைக்கப்படுவதால், எதிர்வரும் இரு மாதங்களுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பு முழுமையாக உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், 45,000 மெட்ரிக் தொன் முழுமையாகத் தேவைப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக உள்நாட்டு நுகர்வுக்குப் பயன்படும் 12.5 கிலோகிராம் நீல நிற சிலிண்டர்களுக்கான நாளாந்த சந்தைத் தேவை சுமார் 80,000 ஆக உள்ள நிலையில், லிட்ரோ நிறுவனம் தற்போது நாளொன்றுக்குச் சுமார் ஒரு இலட்சம் சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகித்து வருகின்றது. தற்போது சில இடங்களில் தற்காலிகமாக எரிவாயு கிடைக்காமலிருப்பதற்குக் காரணம், விற்பனை நிலையங்களுக்குக் காலையில் விநியோகிக்கப்படும் சிலிண்டர்கள் மாலைப் பொழுதாகும் போது விற்றுத் தீர்ந்துவிடுவதேயாகும்.
இதனால் மாலை வேளையில் செல்லும் நுகர்வோருக்கு உடனடியாக எரிவாயு கிடைக்காமல் போனாலும், அடுத்த நாள் காலையிலேயே மீளவும் புதிய சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.
தினமும் தொடர்ச்சியாக ஒரு இலட்சம் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருவதால், இன்னும் ஓரிரு நாட்களில் இந்தத் தற்காலிக நெரிசல் முழுமையாகச் சீரடைந்து நிலைமை வழமைக்குத் திரும்பும்.
அதேவேளை, நாட்டில் நிலவும் எரிவாயுப் பற்றாக்குறை மற்றும் நுகர்வோர் வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டால், நாட்டின் எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்து எந்தவொரு அவசர நிலைமைக்கும் முகங்கொடுக்க லிட்ரோ நிறுவனம் முழுமையாகத் தயாராக உள்ளது.
பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்கும் நிலை காணப்பட்டாலும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. நவம்பர் மாதத்திற்குத் தேவையான 44,000 மெட்ரிக் தொன் எரிவாயுவில், முதற்கட்டமாக 6,000 மெட்ரிக் தொன் எரிவாயு நவம்பர் முதலாம் திகதியே நாட்டிற்குப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், எஞ்சிய தொகைக்கான கப்பல்கள் மற்றும் விநியோகத் திகதிகள் தொடர்பில் இறுதி உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
இம்முறை எரிவாயு விநியோகத்தில் எவ்வித கடல்சார் போக்குவரத்துத் தாமதங்களும் ஏற்படாத வகையில் விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஓமான் அல்லது அமெரிக்கா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்து எரிவாயுவை நேரடியாகக் கொண்டுவரும்போது கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் சிக்கல்கள் காரணமாகத் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனினும், இந்த மாதத்திற்குத் தேவையான ஒட்டுமொத்த எரிவாயுவை லிட்ரோ நிறுவனத்தின் விநியோகஸ்தர் ஏற்கனவே மாலைதீவுக்குக் கொண்டுவந்து, அங்குள்ள மிதக்கும் களஞ்சியகத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துள்ளதால், அத்தகைய போக்குவரத்துத் தடங்கல்கள் எவையும் நவம்பர் மாத விநியோகத்தைப் பாதிக்காது.
மாலைதீவில் சேமிக்கப்பட்டுள்ள எரிவாயுவில் பெருமளவான பகுதி இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதுடன், எந்தெந்தத் திகதிகளில் கப்பல்கள் ஊடாக எவ்வளவு தொகை நாட்டிற்கு வரும் என்பது விநியோகஸ்தரால் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இதில் எந்தவித தடங்கலும் இல்லை.
சந்தையில் லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயுவை விநியோகிக்கத் தவறினாலும் கூட, ஒட்டுமொத்தத் தேவையையும் ஈடுசெய்யும் வகையில் 44,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளை, லாஃப்ஸ் நிறுவனத்திற்கும் மூன்று கப்பல்கள் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் நெருக்கடிகள் பெருமளவில் நிவர்த்தியடையும் என்ற போதிலும், நவம்பர் மாதத்தில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைக்கும் முன்கூட்டியே தயாராகவே லிட்ரோ நிறுவனம் இந்நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.