ரோஹண விஜேவீரவின் 37ஆவது நவம்பர் வீரர் நினைவேந்தல் தினத்தன்று, நள்ளிரவு முதல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டிருப்பது வேதனையும் துயரமும் அளிப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பிரியங்கார மகாமுல்லகே சுட்டிக்காட்டினார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அனைத்து மக்களையும், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினரையும் கடுமையாகப் பாதிக்கும் செய்தியுடனேயே இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. நவம்பர் 13ஆம் திகதி நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே லாஃப்ஸ் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவிய நிலையில், தற்போது அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக லிட்ரோ எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்படலாம் என நாம் எதிர்பார்க்கிறோம்.

அரசாங்கத்தின் நண்பருக்குச் சொந்தமான நிறுவனத்தினாலேயே இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏழை மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்ததாகக் கூறும் அரசாங்கம், ரோஹண விஜேவீர நினைவேந்தல் தினத்தன்றே இவ்வாறு விலையை அதிகரித்திருப்பது வேதனையானது.

மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகாலப் போராட்டம் உழைக்கும் வர்க்கத்தினரதும் வறிய மக்களினதும் உரிமைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டது.

ரோஹண விஜேவீரவின் கொலை மற்றும் பட்டலந்த விவகாரம் தொடர்பில் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தில் அரசாங்கத் தரப்பினர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதை நாம் கண்டோம். பிமல் ரத்நாயக்கவும் ஆவேசமாக உரையாற்றினார்.

ஆனால், இதுவரை என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பட்டலந்த அறிக்கை தொடர்பான விடயம் தேர்தல் அரசியலுக்காகவும் கட்சியினரைத் திருப்திப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்பட்டதே தவிர, உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வடக்கில் பால்ராஜ் நினைவுகூரப்படும்போது அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதில் கலந்துகொள்கின்றனர்.

அத்தகைய நினைவேந்தல்களுக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாத நிலை காணப்படுகிறது. திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின்போது 11 நாட்களுக்கு அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.

தெற்கில் நவம்பர் வீரர்கள் நினைவேந்தப்படுகின்றனர். ஆனால், நாட்டின் பாதுகாப்பையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரை 'வீரப் படைவீரர்கள்' என்று அழைப்பதற்குக்கூட அரசாங்கம் தயங்குகின்றது என்றார்.