தித்வா புயலினால் சேதமடைந்த மலையக புகையிரதப் பாதையின் ரம்புக்கனை முதல் கடுகண்ணாவை வரையிலான பகுதி சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் பேராதனை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
தித்வா புயலினால் ரம்புக்கனை, கண்டி மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளில் புகையிரதப் பாதையின் 103 இடங்கள் சேதமடைந்திருந்தன. அவற்றில் 36 பாரிய மண்சரிவுகளும், 67 இடங்களில் புகையிரதப் பாதைகள் சேதமடைந்தும் காணப்பட்டன.
ரம்புக்கனை முதல் கடுகண்ணாவை வரையிலான பகுதிக்கு செல்வதற்கான மாற்று வழிப்பாதைகள் இல்லாததால், சேதமடைந்த பாதையை சீரமைப்பதில் புகையிரத திணைக்களம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தது.
எனினும், தற்போது குறித்த பாதை புகையிரதப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் பேராதனை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த சேவை முன்னர் கண்டி புகையிரத நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட சேவைக்கு இணையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பேராதனையில் மகாவலி கங்கையின் குறுக்கே அமைந்துள்ள புகையிரதப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
இதனால், கொழும்பிலிருந்து கண்டி வரை நேரடி புகையிரத சேவையை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும், தற்போது கொழும்பு – பேராதனை இடையிலான சேவையாகவே இது இடம்பெறும் எனவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.