நாட்டின் பல பகுதிகளில் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் ஏற்படும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பதுளை, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த எச்சரிக்கை இன்றையதினம் பிற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்பதுடன், குறித்த பகுதிகளில் மின்னல் அபாயம் அதிகம் அல்லது நடுத்தர அளவில் காணப்படும். அத்துடன், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளைக் குறைப்பதற்குப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது:

மின்னல் தாக்கம் நிலவும் போது திறந்த வெளிகளில் தங்குவதைத் தவிர்த்து, கட்டிடங்களுக்குள் தஞ்சமடைய வேண்டும். மரங்களின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்க்கவும்.

நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மின்சார இணைப்புடன் கூடிய தொலைபேசிகள் மற்றும் ஏனைய மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

துவிச்சக்கர வண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சரிந்து விழும் மரங்கள் மற்றும் அறுந்து விழும் மின்சாரக் கம்பிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால், உடனடியாக உள்ளூர் இடர் முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.