கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் மின்சாரக் கம்பிகள், செப்புக் கம்பிகள் மற்றும் மின் விளக்குத் தூண்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தொடர்ச்சியாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக 2024 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிவேகப் பாதையில் மொத்தம் 100 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பதிவான சம்பவங்களில் 11 கொள்ளைச் சம்பவங்களின் பெறுமதி மாத்திரம் 580 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எஞ்சிய 89 கொள்ளைச் சம்பவங்களின் பெறுமதி இதுவரை கண்டறியப்படவில்லை.
அதிவேகப் பாதையின் நடுப்பகுதியில் பதிக்கப்பட்ட மின்சாரக் கம்பிகள் முழுமையான காங்கிரீட் பாதுகாப்பிற்குப் பதிலாக, 3 அடி விட்டம் கொண்ட அரைவட்ட வடிவிலான ஹியூம் குழாய்களால் அரைகுறையாகவே மூடி மறைக்கப்பட்டுள்ளன.
இதனால் மின்சாரக் கம்பிகளை மிக இலகுவாக அறுத்து எடுத்துச் செல்லக்கூடிய நிலை காணப்பட்டதாகக் கள ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது.
முதன்முதலில் 2021 இல் கொள்ளைச் சம்பவம் பதிவான போதிருந்தே முறையான பாதுகாப்பு வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தாமையும், பொறுப்பான மேற்பார்வை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமையுமே கொள்ளைச் சம்பவங்கள் தொடரக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகப் பாதையின் முதல் 10 கிலோமீற்றருக்கு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், பாதையின் முழுமையான சீரமைப்புப் பணிகளுக்கு 1,770 மில்லியன் ரூபாவுக்கும் அதிகத் தொகை செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் சேதங்களுக்குப் பொறுப்பான நபர்கள் இதுவரை முறையாக அடையாளம் காணப்படவோ அல்லது அவர்களுக்கு எதிராகப் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவோ இல்லை என்றும் அந்த தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.