அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த, தம்புள்ளையைச் சேர்ந்த மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம், மொத்தம் 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் மாத்தளை மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, தம்புள்ளையில் உள்ள இரு வர்த்தக நிலையங்களில் இந்த சட்டவிரோத விற்பனை கண்டறியப்பட்டது.
இதன்போது, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில், 255 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவேண்டிய ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி, 261 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், தம்புள்ளை நகரில் உள்ள சில்லறை வர்த்தக நிலையமொன்றில், 260 ரூபா கட்டுப்பாட்டு விலை கொண்ட உள்நாட்டு கீரி சம்பா அரிசி, 360 ரூபா என்ற அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக, தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தினால் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.