கணினி குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 36 வெளிநாட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 37 பேர் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், நேற்று சனிக்கிழமை (02) மாலை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மற்றும் தலங்கம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 23 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட சீனப் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவரிடம் இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்பதுடன் ஒரு சந்தேகநபரிடம் கடவுச்சீட்டு இருக்கவில்லை, மற்றுமொருவரிடமிருந்து 2100 சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தங்கியிருந்த கட்டிடம் சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.