வரலாற்று சிறப்புமிக்க தேவேந்திரமுனை மற்றும் கதிர்காமம் ஆகிய ஆலயங்களின் நிலமேக்களின் பாதுகாப்பை அரசாங்கமும் பொலிஸ் துறையும் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனசெத பெரமுன கட்சியின் தலைமைச் செயலகத்தில் திங்கட்கிழமை (27)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:

நாட்டில் தற்போது நிலவி வரும் அச்சமளிக்கும் சூழலில், வரலாற்றுப் சிறப்புமிக்க புண்ணிய தலங்களைப் பாதுகாப்பதிலும், அவற்றின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் நிலமேக்களின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்குவதிலும் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக கதிர்காமம் நிலமே மற்றும் தேவேந்திரமுனை விஷ்ணு தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஆகியோரின் பாதுகாப்பை பொலிஸ் துறையும் அரசாங்கமும் உடனடியாகத் கவனத்தில்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.

நாட்டில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு மத்தியில், எந்த நேரத்தில் எங்கு வைத்து இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ தெரியாது என்ற அச்ச நிலையே காணப்படுகின்றது.

எனவே, பொலிஸ் மா அதிபர், பொலிஸ் அமைச்சர் மற்றும் பொலிஸ் செயலாளர் ஆகியோர் தங்களின் பொறுப்பையும் திறமையையும் பயன்படுத்தி, இந்த நிலமேக்களின் பாதுகாப்பை உடனடியாகப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை, வரலாற்று சிறப்புமிக்க தேவேந்திரமுனை பெரஹரா, கண்டி தலதா மாளிகை பெரஹரா மற்றும் கதிர்காமப் பெரஹரா உள்ளிட்ட தேசியப் பாரம்பரிய விழாக்கள் தொடர்பாக சிலர் பல்வேறு தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முயல்கின்றனர். கண்டி தலதா மாளிகையின் பெரஹரா தொடர்பில் முகவரியற்ற சிலர் திட்டமிட்டுச் சிக்கல்களைக் கிளப்பி வருகின்றனர்.

ஆட்சியில் உள்ளவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் பிறக்கும் போது மகா சங்கத்தினரே போதி பூஜைகள் செய்து, பிரீத் நூல்களைக் கட்டி உங்களைப் பாதுகாத்தார்கள். இன்று அதிகாரம் வந்துவிட்டது என்பதற்காக இந்தச் புத்த சாசனத்தையோ அல்லது அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரஹரா கலாசாரப் பாரம்பரியங்களையோ அழிக்கவோ அல்லது சீர்குலைக்கவோ முற்படக் கூடாது என்றார்.