பொலிஸாருக்காக உடலில் பொருத்தப்படும் கமராக்கள் மற்றும் டாக்கிங் ஸ்டேஷன்களை (Docking Stations) கொள்முதல் செய்வதற்கான விலைமனுக்கோரல் நடைமுறையில் பெருமளவிலான முறைகேடுகளும் தொழில்நுட்பக் குளறுபடிகளும் இடம்பெற்றுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை பொலிஸாரின் பாதுகாப்புப் பிரிவினருக்குத் தேவையான 500 பாடி கமராக்கள் மற்றும் 70 டாக்கிங் ஸ்டேஷன்களைக் கொள்முதல் செய்வதற்காக இவ்வருட மார்ச் மாதம் விலைமனுக்கோரல் கோரப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கு இத்தொழில்நுட்பம் அவசியமானது என்ற போதிலும், இதன் விலைமனுக்கோரல் நடைமுறை பெருமளவில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, இத்திட்டத்திற்கான தேவைகள் அடங்கிய TOR அறிக்கையானது தொழில்நுட்ப நிபுணர்கள் அல்லது பேராசிரியர்களால் தயாரிக்கப்படாமல், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பெறப்பட்ட பதில்களை அப்படியே 'காப்பி-பேஸ்ட்' செய்து தயாரிக்கப்பட்டுள்ளன.

முறையான தொழில்நுட்ப வரம்புகள் நிர்ணயிக்கப்படாததால், டெண்டருக்காக விண்ணப்பித்துள்ள 24 நிறுவனங்களின் ஏலத் தொகைகளில் பெருமளவு முரண்பாடுகள் காணப்படுகின்றன. 

ஒரு நிறுவனம் ரூ. 5 கோடியைக் குறிப்பிட்டுள்ள நிலையில், மற்றொரு நிறுவனம் ரூ. 36 கோடியைக் கோரியுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனம் ரூ. 17 கோடியைக் குறிப்பிட்டுள்ள நிலையில், அதன் கீழ் இயங்கும் மொபிடெல் நிறுவனம் ரூ. 6 கோடியைக் குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தின் தற்போதைய டிஜிட்டல் ஆலோசகராகப் பணியாற்றும் நபர், முன்னதாக டயலாக் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்தவர் என்றும், தற்போது அதே டயலாக் நிறுவனம் இட்டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளதால் இதில் பெரும் நலமுரண் நிலவுகின்றன. 

எனவே, ஊழலுக்கு வழிவகுக்கும் தற்போதைய டெண்டர் நடைமுறையை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தகுதிவாய்ந்த நிபுணர்களைக் கொண்டு புதிய வழிகாட்டுதல்களுடன் மீண்டும் வெளிப்படையாக டெண்டர் கோரப்பட வேண்டும் என்றும், தவறான ஆவணங்களை உருவாக்கிய அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கைகளும் மக்கள் போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றார்.