அரசாங்கம் முன்மொழிந்துள்ள “இலங்கை ஊடகத் துறைசார் நிபுணர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” சட்டமூலம், டிஜிட்டல் சிவில் வெளி, சுயாதீன ஊடகவியல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என சமூக ஊடகப் பிரகடனத்திற்கான கூட்டமைப்பு (Collective for Social Media Publication) தெரிவித்துள்ளது.
2026 ஜூன் மாதத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம், ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகளை உருவாக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் டிஜிட்டல் ஊடகச் செயற்பாட்டாளர்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் விமர்சனக் குரல்களை கட்டுப்படுத்தும் கருவியாக பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டம் அமலுக்கு வந்த முதல் ஆண்டில் செயற்படும் இடைக்கால சபை முழுமையாக பொறுப்பதிகார அமைச்சரின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக அமையும் என்றும், இதன் மூலம் நிறுவனத்தின் ஆரம்ப கட்டமைப்பிலேயே அரசியல் தலையீட்டிற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அந்தக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், YouTube, Facebook, TikTok உள்ளிட்ட தளங்களில் செயல்படும் உள்ளடக்க உருவாக்குநர்களையும் “ஊடகத் துறைசார் நிபுணர்கள்” என்ற வரையறைக்குள் கொண்டு வருவது, சுயாதீன டிஜிட்டல் குரல்களை அரசின் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாகக் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், “முறையற்ற நடத்தை” என்ற பதம் தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில், நிர்வாக சபைக்கு பரந்த ஒழுங்கு நடவடிக்கை அதிகாரங்கள் வழங்கப்படுவது, அரசாங்கத்தை விமர்சிக்கும் உள்ளடக்கங்களை ஒழுக்க மீறலாகக் கருதி நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சட்டமூலம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act) மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) ஆகியவற்றுடன் இணைந்து, சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக “மும்மடங்கு சட்ட அச்சுறுத்தலை” உருவாக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
அரசியலமைப்பின் 14(1)(a) பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுவதோடு, ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கான அச்சத்தால் சுய-தணிக்கை (Self-Censorship) செய்யும் சூழல் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, தொழில்முறை என்ற பெயரில் கருத்துச் சுதந்திரத்தையும் சிவில் வெளியையும் கட்டுப்படுத்தும் இந்தச் சட்டமூலத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள அந்த அமைப்பு, ஊடகச் சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க அனைத்து சிவில் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் குடிமக்கள் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.